பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
122
புறநானூற்றுச் சிறு கதைகள்
 


இரவலர் புரவலை நீயும் அல்லை புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர் இரவலர் உண்மையும் காண்இனி இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காண்இனி நின்னூர்க் கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த நெடுநல் யானையெம் பரிசில் கடுமான் தோன்றல் செவ்வல் யானே! (புறநானூறு - 162)

இரவலர் = யாசிப்பவர், புரவலர் = பாதுகாப்பவர், ஈவோர் = கொடுப்போர், கடிமரம் = காவல் மரம், பிணித்த= கட்டிவைத்துள்ள, கடுமான் = விரைந்து செல்லும் குதிரை.


28. பசுமை நினைவுகள்

பளிங்குபோலத் தெளிந்த நீரின் வெண்பட்டு மடிப்பு போன்ற சின்னஞ்சிறு அலைகள் அந்தப் பொய்கைக்கு ஒரு தனி அழகைக் கொடுத்தன. இடையிடையே அல்லி, குவளை, தாமரை, முதலிய மலர்களும், அவற்றின் நீலங் கலந்த பசுமைநிற இலைகளுமாக அந்த எழிலை எடுத்துக் காட்டி விளக்க முயன்று கொண்டிருந்தன. பொய்கையைச் சுற்றிலும் கப்பும் கவருமாகக் கிளைத்து வளர்ந்துள்ள பெரிய பெரிய மரங்கள் வேலி எடுத்ததுபோல அடர்ந்து வளர்ந்திருந்தன.

பொய்கையின் நான்கு பக்கத்திலும் வசதியான படித் துறைகள் இருந்தன. அவற்றில் இறங்கி ஆண்களும் பெண்களுமாகப்ப்லர் நீராடிக் கொண்டிருந்தார்கள். ஆண்களில் தைரியசாலிகளாக இளைஞர்கள் சிலர் மரங்களின் கிளைகளில் ஏறி அங்கிருந்து துணிச்சலோடு பொய்கையில் திடும்திடும் என்று குதித்து நீந்தி விளையாடினார்கள். பொய்கைக் கரையிலிருந்து ஈரமணற் பரப்பில் கன்னிப் பெண்கள் மணலைக் கூட்டிப் பிடித்துப்பொம்மை போலச்செய்து, அப்படிச்செய்த பொம்மைகளுக்குப் பூக்களைக் கொய்து அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.