பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
127
 


உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நனிப் படிகோடேறிச் சீர்மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்டகல்லா விளமை
அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண் டுன்றி நடுக்குற்
றிருமிடை மிடைந்த சிலசொற்
பெருமூ தாளரே மாகிய வெமக்கே! (புறநானூறு- 243)

திணிமணல் = செறிந்தமண், பாவை = பொம்மை, தண்கயம் = குளிர்ந்த பொய்கை, தூங்கி = அசைந்து, சினை = கிளை, அளிதோ = இரங்கத்தக்கதே, தண்டு = கம்பு.


29. அன்றும் இன்றும்

அன்று பெளர்ணமி. வானவெளியின் நீலப்பரப்பில் முழு நிலா தன் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தது. விண்மீன்கள் மினுமினுத்ததுக் கொண்டிருந்தன. அழகான பெண்ணின் சிவந்த மேனியில் சந்தனக் குழம்பு பூசினால் தெரியும். மங்கலான காந்தியைப் போல நிலா ஒளியில் மலைச்சிகரங்கள் தென்பட்டன.

கண்ணைக் கவரும் நீல நிறத் தண்ணிர் தேங்கி நிற்கும் ஒரு பெரிய சுனை. அந்தச் சுனையின் கரையில் கப்பும் கவடுமாக ஓங்கி வளர்ந்திருந்தது. ஒரு மூங்கிற் புதர். அந்தப் புதருக்கு அருகே அதை ஒட்டி ஒரு சிறு குடிசை தோன்றுகிறது. அங்கே குடிசைவாயிலில் இரண்டு இளம் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். உள்ளே யாரோ வயதான ஆடவர் ஒருவர் தூங்குவதுபோலத் தெரிந்தது.

அமர்ந்திருந்த பெண்களின் முகத்தில் அழகு இருந்தது. ஆனால் இளமைக் குறுகுறுப்பு இல்லை. மணியில் மாசு படிந்தாற்போலச் சோகம் அந்த இளம் நெற்றிகளில் படிந்திருந்தது.