பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

141

என்ற திகில் மற்றவர்கள் மனத்தில் தோன்றியது. வளவன் அமைதியும், ஆத்திரமும் மாறி மாறி நிற்கும் விழிகளால் அவரை ஊடுருவிப் பார்த்தான்.

“வளவா! பாம்பை அடிக்க முடியாமல் தவறவிட்டுவிட்டு, அந்த ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் பாம்புப் புற்றின்மேல் காட்டி அதை உடைக்க முயல்வதுபோல் இருக்கிறது உன் செயல். ஒரு புறாவுக்காகத் தன் உடலையே.அறுத்துக் கொடுக்க முன்வந்த சிபிச் சக்கரவர்த்தியின் மரபிலே தோன்றியவன் அல்லவா நீ? இந்தக் குழந்தைகள் மலையமானின் இரத்தம் ஒடுகிற உடலை உடையவர்கள் என்பதைத் தவிர வேறு என்ன பாவம் செய்தார்கள்? இதோ பார்! நீ யானைக் காலில் இட்டுக் கொல்லப் போகிறாய் என்பதையே உணராமல், சிரித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்! இவர்களுடைய பச்சிளங் குருதி நீதி நிறைந்த இந்தச் சோழ நாட்டு அரண்மனை முற்றத்தில் படிந்து களங்கத்தை உண்டாக்க வேண்டும் என்றுதான் நீ கருதுகிறாயா? நான் சொல்லிவிட்டேன். உன் விருப்பம்போல் இனி நீ செய்யலாம்.”

படிப்படியாகக் கிள்ளிவளவனுடைய முகம் மாறியது. கண்களில் உணர்ச்சி மாறியது. அவன் அந்தக் குழந்தைகளைப் பார்த்தான். குழந்தைகள் அவனைப் பார்த்துச் சிரித்தன. அந்தப் புனிதம் நிறைந்த குழந்தைச் சிரிப்பின் சக்தி அவனையும் சிரிக்கச் செய்துவிட்டது. யானையைக் கொண்டுபோய் விடுமாறு கட்டளை இட்டான். குழந்தைகளைத் தழுவி உச்சி மோந்தான்.

அறிவு செய்ய முடியாத காரியத்தை அன்பு செய்துவிட்டது. புலவரின் உரையும் குழந்தைகளின் சிரிப்பும் கிள்ளிவளவனின் கண்களைத் திறந்துவிட்டன.

நீயே புறவின்அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே, புலனுழு துண்மார் புன்கண்அஞ்சித்
தமது பகுத்துண்ணுந் தண்ணிழல் வாழ்நர்
களிறு கண்டமூஉம் அழாஅல் மறந்த