பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

169


கனி எப்படியும் நமக்குக் கிடைக்க வேண்டும். அதியமானின் வற்புறுத்தலான கட்டளையை மறுக்க முடியாமல் வேடர்கள் நெல்லி மரத்தில் ஏறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர். சில நாட்களில் மருந்து தூவி வண்டுகள் அழிக்கப் பட்டன. அரிய முயற்சியின் விளைவாகச் சாரமும் அமைக்கப்பட்டது.வேடர்களும்,அதியமானும் சேர்ந்து முயன்று அந்த ஒரு நெல்விக்கனியை அடைந்தனர்.

அதியமான் நெல்லிக் கனியோடு அரண்மனைக்குத் திரும்பினான். பெற முடியாத பொருள் ஒன்றை அரிய முயற்சியால் பெற்றுக் கொண்டு வந்துவிட்ட மகிழ்ச்சி அவன் மனத்தில் நிறைந்திருந்தது.

அங்கே அரண்மனையில் ஒளவையார் அவனைச் சந்திப்ப தற்காகக் காத்துக் கொண்டிருந்த சமயத்தில் நெல்லிக்கனியோடு போய்ச் சேர்ந்தான்.அவன் ஒளவையாரைக் கண்டதும் தனக்குள் இப்படிச் சிந்தித்தான்.

“தம்முடைய அறிவுரைகளால் இளைஞர்களையும் முதியோர்களையும் என்போன்ற அரசர்களையும் பண்பட்டு வாழச் செய்கின்ற இவருக்கு மூப்பு வந்துவிட்டது. இவர் இன்னும் நீண்டநாள் உயிர் வாழ்ந்தால் இந்த உலகத்துக்கு எவ்வளவு பயன்? என் போன்ற அரசர்கள் உலகத்தை நாங்களே பாதுகாப்பதாக எண்ணிக்கொண்டு தலை கனத்து இறுமாந்து திரிகின்றோம். உண்மையில் உலகத்தை வாழ்விப்பவர்கள் இவரைப் போலத்துாய உள்ளம் பெற்ற புலவர்கள் அல்லவா? என்னிடம் இருக்கும் இந்த நெல்லிக்கனியை இவருக்கு அளித்து இவரை நீண்டநாள் வாழச் செய்தால் என்ன?

அதியமான் ஒளவையாரை வணங்கினான். ஒளவையார் வாழ்த்தினார்.

“தாயே! இதை என் அன்பளிப்பாக ஏற்று உண்ண வேண்டும்” நெல்லிக் கனியைப் பணிவாக எடுத்து அவரிடம் நீட்டினான்.