பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

புறநானூற்றுச் சிறு கதைகள்


நுரையைப் போன்ற மெல்லிய பூம்பட்டு விரிக்கப்பட்டிருந்தது. பட்டு விரிப்பின்மேல் படுத்த சுகம், உடம்பு தன்னை மறந்த உறக்கத்தில் உணர்வொடுங்கியிருந்தது. புலவர் வெகுநேரம் உறங்கினார். நன்றாக உறங்கினார். உறக்கத்தின்போது அங்கே மண்டபத்திற்குள் யார் வந்தார்கள்? என்ன செய்தார்கள்? என்பதே அவருக்குத் தெரியாது.

மறுபடியும் அவர் கண்விழித்தபோது திகைப்படையத்தக்க காட்சியைக் கட்டிலின் அருகே கண்டார். மன்னர் மன்ன்னாகிய பெருஞ்சேரல் இரும்பொறை மயில்தோகையாற் செய்யப்பட்ட விசிறியால் தமக்கு வீசிக்கொண்டிருப்பதைக் கண்டார் அவர். தூக்கிவாரிப் போட்டது அவருக்கு பதை பதைத்துப் போய் எழுந்திருந்து கட்டிவிலிருந்து கீழே குதித்து இறங்கினார்.

“ஏன் எழுந்திருந்துவிட்டீர்கள் புலவரே? இன்னும் உறங்க வேண்டுமானால் உறங்குங்கள். இன்னும் சிறிதுநேரம் உங்கள் பொன்னான உடம்புக்கு விசிறியால் வீசுகின்ற பாக்கியத்தை யாவது நான் பெறுவேனே?’ சிரித்துக் கொண்டே தன்னடக்க மாகக் கூறினான் அரசன்.

“என்ன காரியம் செய்தீர்கள் அரசே! நான்தான் ஏதோ துரக்க மயத்தில் என்னை மறந்து உறங்கிவிட்டேன்.தாங்கள் அதற்காக..”

“பரவாயில்லை மோசிகீரனாரே! தமிழ்ப் புலவர் ஒருவருக்குப் பணிவிடை செய்யக்கொடுத்து வைக்க வேண்டுமே!”

அரசனைச் சுற்றி நின்றவர்கள் கையில் பெரிய முரசம் ஒன்றைத் தாங்கிக் கொண்டு நிற்பதைப் புலவர் அப்போதுதான் கவனித்தார். உடனே திடுக்கிட்டார். அவர் உடல் வெடவெட வென்று நடுங்கியது.கண்கள் பயத்தால் மிரண்டனவாயில் பேச்சு எழாமல் பயத்தினால் நாகுழறியது.

அவருடைய இந்தத் தடுமாற்றத்துக்குக் காரணம் என்ன? தாம் படுத்திருந்த கட்டில் அரசனுடைய முரசு கட்டில் என்பதை அவர் தெரிந்துகொண்டு விட்டார். முர்சு கட்டிலில் முரசு தவிர வேறு மனிதர்கள் யாராவது ஏறினால் அவர்களை அந்தக்கணமே