பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/183

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
181
 


வாளால் வெட்டிக் கொன்றுவிடுவது வழக்கம். அவர் அரண் மனைக்குள் நுழைந்த நேரத்தில் அந்தக் கட்டில் காலியா யிருந்ததன் காரணம், காவலர்கள் முரசத்தை நீராட்டுவதற்கு எடுத்துக் கொண்டு போயிருந்ததுதான்.

“அரசே! இதுவரை முரசு கட்டிவிலா நான் படுத்துக் கொண்டிருந்தேன்?”

“ஆமாம் புலவரே! நீங்கள் வேண்டுமென்றா செய்தீர்கள்? உறக்க களைப்பு. பாவம் தெரியாமல் ஏறிப்படுத்துக் கொண்டு விட்டீர்கள்.”

“முறைப்படி என்னை இந்தக் குற்றத்திற்காக நீங்கள் வாளால் வெட்டிக் கொன்றிருக்க வேண்டுமே! என்னை எப்படி உங்களால் மன்னிக்க முடிந்தது?”

“வேறொருவர் இதே காரியத்தைச் செய்திருந்தால் முறைப் படி அவ்வாறு செய்திருக்கத் தயங்க மாட்டேன் புலவரே நான் இந்தப் பக்கமாக வரும்போது கட்டிலில் ஆள் படுத்திருப்பதைக் கண்டு ஆத்திரத்தோடு வாளை உருவிக் கொண்டுதான் வந்தேன். நல்லவேளையாக நீங்கள் அப்போது புரண்டுபடுத்தீர்கள். உங்கள் முகத்தைக் கண்டு கொண்டேன். கோபம் அடங்கியது. தமிழுக்கு மரியாதை செய்வது என் கடமை, உருவிய வாளை உறைக்குள் போட்டேன். எழுந்த ஆத்திரத்தை அன்பிற்குள் அடக்கினதைப் போல. அப்போதிருந்தே விசிறியை எடுத்து வீசிக்கொண்டுதான் இருக்கிறேன். நடுவில் நீராட்டச் சென்றிருந்த இவர்கள் முரசத்தை வைப்பதற்காகக் கொண்டு வந்தார்கள், உங்கள் அமைதியான உறக்கம் கலைந்துவிடக்கூடாதே’ என்பதற்காக இவர்களை இப்படியே தடுத்து நிறுத்தி வைத்தேன். இப்போதுதான் உங்கள் தூக்கம் கலைந்தது. நீங்கள் எழுந்திருந்தீர்கள் இரும்பொறை தூங்கும்போது நடந்த நிகழ்ச்சிகளைப் புலவருக்கு விவரமாக எடுத்துக் கூறினான்.

புலவர் மோசிகீரனார் நன்றிப் பெருக்கினால் கண்களில் நீர் சுரக்க அவனை அப்படியே இறுகத் தழுவிக்கொண்டார்.