பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
184
புறநானூற்றுச் சிறு கதைகள்
 

“அரசாட்சியில் உள்ளவர்களுக்கு மக்களை அடக்கி ஆளவும் அதிகாரம் செய்யவும் தெரிந்தால் மட்டும் போதாது மக்களின் கஷ்டநஷ்டங்களை உணர்ந்து கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்.”

“திரும்ப திரும்பப் பூடகமாகப் பேசுகிறீர்களே ஒழிய, விஷயத்தைத் தெளிவாகச் சொல்லமாட்டேன் என்கிறீர்களே”

“தெளிவாகச் சொல்லவேண்டிய விஷயம்தான் நம்பீர்”

“நீங்கள் சொல்லி, நான் கேட்க மறுத்தது உண்டா புலவரே! சொல்லுங்கள்; தவறு என்புறம் இருக்குமாயின் உடனே திருத்திக் கொள்ள முயல்கிறேன்.”

“ஒரு மா அளவுள்ள சிறிய நிலமானாலும் அல்லது அதற்கும் குறைந்த நிலமாகவே இருந்தாலும், அந்நிலத்தில் முற்றி விளைந்த பயிரை அறுவடை செய்து தானியத்தைச் சேகரிக்க வேண்டும். அவ்வாறு சேகரித்ததானியத்தைச்சோறாகக் சமைத்து ஒரு பெரிய யானைக்குப் பசித்தபோதெல்லாம் கவளம் கவளமாக வாரிக் கொடுத்தாலும் அது பலநாள் காணும்..”

“நீங்கள் விஷயத்தைச் சொல்கிறீர்களா? அல்லது சிறு குழந்தைகளுக்குப் பொழுது போவதற்காகச் சொல்வார்களே, அந்த மாதிரி ஏதாவது யானைக் கதை, குதிரைக் கதை சொல்கிறீர்களா?”

“முழுவதும் கேள் நம்பி! அதற்குள் பொறுமை இழந்து விடுகின்றாயே..?”

“நூறு செறு (நிலத்தின் ஓரளவு) அளவுடைய பெரிய நிலமாக இருந்தாலும் அதில் விளைந்த பயிரை அறுவடை செய்யாமலே இந்தப் பெரிய யானையை அவிழ்த்துவிட்டு விடலாம்! அப்பொழுது என்ன ஆகும்? இந்த யானை வயலுக்குள் புகுந்து நெற்கதிர்களை உண்ணும். அப்படி உண்ணும்போது அது உண்ணக்கூடிய தானியத்தைக் காட்டிலும் அதன் பெரிய கால்களால் மிதிபட்டு உதிர்ந்து வீணாகிற தானியமே அதிகமாக இருக்கும்!”