பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

185

“சிறிய நிலமானாலும் பயிரைமுறையாக அறுவடைசெய்து கவளம் கவளமாக யானை வாயில் தள்ளினாலும் அது யானைக்குப் பலநாள் காணும். பெரிய நிலமானாலும் அறுவடை செய்யாமலே யானையை நிலத்திற்குள்ளேயே நுழைய விட்டு விட்டால் அது ஒருமுறை உண்பதற்குள் நிலம் முழுவதும் மிதிபட்டுப் பயிர் அழிந்து போகும்...!”

“உம்ம். சரி! அப்புறம் மேலே சொல்லுங்கள்...”

“கதை சொல்லவில்லை நான்! அரசன் யானையைப் போன்றவன். குடிமக்கள் விளைந்த பயிருடனே கூடிய விளை நிலங்களைப் போன்றவர்கள்...!”

“உங்கள் உவமை மிகவும் அழகாக இருக்கிறது.”

“அழகாக மட்டுமிருக்காது! கொஞ்சம் ஆழமாகவும் இருக்கும். மேலே கேள்; அறிவுணர்வு மிக்க அரசன் மக்களிடம் முறைகேடற்ற விதத்தில் வரிப்பணத்தைப் பெற்றுக் கொண்டால் அவன் செல்வம் கோடி கோடியாகப் பெருகும். நாடும் வளர்ச்சியடையும். ஆக்கம் பெறும்.அறிவுணர்வு குறைந்த அரசன் நாள்தோறும் தரமறியாமல் வீண் ஆரவாரங்களைச் செய்கிற சுற்றத்தினரோடு கூடி மக்களின் அன்பு கெட்டுப்போகுமாறு அவர்களிடம் வற்புறுத்தி அதிக வரியும் தண்டமும் பறிக்க முயன்றால் யானை நுழைந்த நிலம்போலத் தானும் உண்ணமுடியாமல் பிறருக்கும் எஞ்சாமல் வீண் அழிவே ஏற்படும்.”

இதைக் கேட்டு அறிவுடை நம்பி திகைத்தான்.

“என் நாட்டில் இந்த முறைகேடு எங்காவது நிகழக் கண்டீர்களா புலவரே?” அவன் குரலில் பரபரப்பும் ஆத்திரமும் மிகுந்திருந்தன.

“கண்டதனால்தான் இந்த யானைக் கதையையும் இதை ஒட்டிய அறிவுரையையும் கூற நேர்ந்தது.”

“எங்கே கண்டீர்கள்?”