பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

புறநானூற்றுச் சிறு கதைகள்


வெளியிட்டார். பாண்டியனுக்கோ அதன் பொருள் இப்போதும் விளங்கவில்லை. 'தன் சிரிப்பின் பொருளை உக்கிரப் பெருவழுதி இன்னும் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை' என்பதை அவனுடைய முகக் குறிப்பிலிருந்தே நக்கீரர் அனுமானித்துக் கொண்டார்.

“அரசே! போகலாமா?” நக்கீரர் பாண்டியன் காதருகே மெல்லிய குரலில் கேட்டார். இருவரும் அந்த வேடனிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டனர். சிறிது தொலைவு வந்ததும், “இந்த வேடன் மறுமொழி கூறிய போதெல்லாம் என்னைப் பார்த்து நகைபுரிந்தீர்களே, அதற்கு அர்த்தமென்ன?” பாண்டியன் கேட்டான்.

“அதற்கு அர்த்தம் இருக்கத்தான் இருக்கிறது! அந்த அர்த்தத்தைச் சொல்லுவதற்கு முன்னால் உன்னிடமும் சில கேள்விகளை நான் கேட்க வேண்டியிருக்கிறது. தயவு செய்து சினமோ ஆத்திரமோ அடைந்துவிடாமல் தவறாகவும் புரிந்து கொள்ளாமல் என்னுடைய அந்தக் கேள்விகளுக்கு அமைதியாக நீ பதில் கூறவேண்டும்.”

“சரி நக்கீரரே! கேளுங்கள், பதில் கூறுகிறேன்.”

“அரசே! உங்களுக்கும் இந்த வேடனுக்கும் ஏதாவது ஒற்றுமையைக் காண்கின்றீர்களா? இல்லையா?”

“என்ன நக்கீரரே! இப்படிக் கேட்கிறீர்கள்? நான் பாண்டி நாட்டுப் பேரரசன், இவன் வெறும் காட்டு வேடன், படிப்பறிவற்றவன்; நாகரிகமற்றவன்.இவனுக்கும் எனக்கும் என்ன ஒற்றுமை இருக்க முடியும்? நீங்கள் என்னைக் கேள்வி கேட்கிறீர்களா? அல்லது கேலி செய்கிறீர்களா?”

“நீங்களும் ஒரு மனிதன்! நானும் ஒரு மனிதன்! இந்த வேடனும் ஒரு மனிதன்தான்; இந்த ஓர் ஒற்றுமையையாவது நீங்கள் ஒப்புக் கொள்ள முடியுமா இல்லையா?”

“சரி! இவனையும் ஒரு மனிதன் என்றே வைத்துக் கொள்வோம்! அப்புறம். மேலே கூறுங்கள்...”