பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


9. அவனுக்குத்தான் வெற்றி!

இந்த உலகத்தில் இரண்டு வகையான காதல் காவியங்கள் வழங்குகின்றன. காதலித்தவனும் காதலித்தவளும் தங்கள் கருத்து நிறைவேறி இன்பமுறும் காவியங்கள் ஒரு வகை. இருவருமே காதலில் தோற்று அமங்கலமாக முடியும் காவியங்கள் இன்னொரு வகை. இருவகைக் காவியங்களும் காதல் காவியங்களே.

ஆனால் காதல் நிறைவேறி மங்கலமாக முடியும் காவியத்தை விடக் காதல் நிறைவேறாமல் அமங்கலமாக முடியும் காவியங்கள்தாம் படிப்போர் மனங்களை உருக்கித் தம் வயமாக்கி விடுகின்றன.

சங்க இலக்கியங்களில் காதல் நிறைவேறாமல் அவல முடிவெய்திய நிகழ்ச்சிகள் பெரும்பான்மையாகக் காணக் கிடைப்பதில்லை. ஆனால் இதற்கு ஒரு சிறு விதிவிலக்காக நிறைவேறாத - நிறைவேற முடியாத காதலை வெளியிட்டுக் குமுறும் ஒரு பெண்ணின் கதையைப் புறநானூற்றில் காண்கிறோம். புறநானூற்றிலுள்ள மிகப் பல சோக நிகழ்ச்சிகளுள் நிறைவேறாத காதலின் ஏக்கமெல்லாம் இழைந்து கிடக்கும் இந்த நிகழ்ச்சியும் ஒன்று.

போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி என்று ஒரு சோழ மன்னன். இந்தச் சோழ மன்னன் எல்லோரையும் போலச் சாதாரணமான வீரன் மட்டுமில்லை. பார்த்தவர் கண்களை மீளவிடாத கட்டழகன். ஆண்களையே மயக்கிவிடுகிற அழகு என்றால், பெண்கள் இந்த அழகுக்குத் தப்பிவிடவா முடியும்? ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, உயர்ந்த காவியத்தைச் சுவைப்பதிலுள்ள ஈடுபாடு அவன் அழகைக் காண்பதில் இருந்தது. இருப்பிடம் தெரியாமல் மணத்தைப் பரப்பும் பூவைப் போன்ற அமைதியான அழகென்று சொல்லிவிடமுடியாது இந்த அழகை கவர்ச்சியும் எழுச்சியும் உண்டாக்கிக் காணும் கண்களை மலர வைக்கும் செயல் திறன் வாய்ந்த அழகு இது.