பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

புறநானூற்றுச் சிறு கதைகள்


தெருவில் இறங்கித் தேரின்மேல்தாவி அவனைத் தழுவிக்கொள்ள வேண்டும்போல உள்ளம் குறுகுறுத்தது. ‘வெட்கம்’ என்று ஒன்று இருந்து தொலைக்கிறதே! அது நினைத்ததை நினைத்தபடி செய்யவிட்டால் தானே?

தேர் சென்றது. தெருக்கோடியில் மறைந்தது? வாழ்த் தொலிகளின் குரல் மங்கித் தேய்ந்து மெலிந்தன. நக்கண்ணையின் விழிகளின் ஒரத்தில் இரண்டு கண்ணிர் முத்துக்கள் திரண்டு நின்றன.

“அம்மா இதென்ன? இப்படித் தெருவில் நின்று கண்ணிர் சிந்திக் கொண்டு.”

நக்கண்ணை திரும்பிப் பார்த்தாள். தோழி பின்னால் நின்று கொண்டிருந்தாள்.

“தோழி! சோழனுக்குத்தான் வெற்றி! சோழன் வென்று கொண்டு போய்விட்டான்.”

“எதை அம்மா”

“என்னை; என் மனத்தை; என்னுடைய எல்லா வற்றையுமேதான்.”

“நீங்கள் என்ன அம்மா? சுத்தப் பைத்தியமாக அல்லவா இருக்கிறீர்கள்? அவன் நாடாளும் பேரரசன். நம்மைப் போன்ற நிலையிலுள்ளவர்கள் அவனைப் போன்றவர்கள்மேல் இப்படி ஆசை கொள்வதே தவறு!”

“தவறுதான்! ஆனால், அது இந்தப் பாழாய்ப் போன மனத்துக்குப் புரியவில்லையே!” நக்கண்ணை கண்ணைத் துடைத்துக்கொண்டு உள்ளே போனாள்.

ஆடாடு என்ப ஒரு சாரோரே
ஆடன்று என்ப ஒரு சாரோரே
நல்ல பல்லோர் இருநன் மொழியே
அஞ்சிலம்பு ஒலிப்ப ஒடிஎம்மின்