பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

63


திடீரென்று தெருவில் மக்கள் பயங்கரமாக அலறிக் கொண்டும் ஓலமிட்டுக் கொண்டும் ஒடுகிறாப்போல ஒலிகள் கேட்டன. இடி முழக்கம்போல யானை பயங்கரமாகப் பிளறிக்கொண்டு வீதியதிரப் பாய்ந்தோடி வரும் ஒசையும் அதை யடுத்துக் கேட்டது.

அதியமான் துணுக்குற்று எழுந்திருந்தான். ஒளவையார் ஒன்றும் புரியாமல் அவனைப் போலவே பதறி எழுந்திருந்தார்.

ஒரு காவலன் பதறிய நிலையில் அங்கு ஓடிவந்தான்.

“அரசே பட்டத்து யானைக்கு மதம் பிடித்துவிட்டது. அது பாகர்களுக்கு அடங்காமல் தெருவில் பாய்ந்து தறிகெட்டு ஒடுகிறது. என்னசெய்வதென்றே தெரியவில்லை.நகர் எங்கும் ஒரே குழப்பமும் பீதியும் மலிந்துவிட்டன.”

காவலன் கூறியதைக் கேட்ட அரசன் விரைந்தோடி மேல் மாடத்தின் வழியே தெருவில் பார்த்தான். ஒளவையாரும் பார்த்தார். பிரளய காலம் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென்று வந்துவிட்டாற்போலத் தெருவை அதம் செய்து சீரழித்துக் கொண்டிருந்தது மதங்கொண்ட பட்டத்து யானை, அதன் கூரிய பெரிய வெள்ளைக் கொம்புகளில் இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. எத்தனை மக்களைக் குத்திக் கொன்றதன் விளைவோ அது? கண்கள் நெருப்பு வட்டங்களாய்ச் சிவந்து மதநீரை வடித்துக் கொண்டிருந்தன. மலை வேகமாக உருண்டு வருவதுபோல எதிர்ப்பட்டன எல்லாவற்றையும் நொறுக்கித் தள்ளி ஒடிக் கொண்டிருந்தது யானை.

“என்ன செய்வது? எப்படி அடக்கச் சொல்வது” ஒன்றுமே தோன்றாமல் நின்றுகொண்டிருந்தான் அதியமான்.

“எல்லாப் பாகர்களையும் ஒன்றுகூடி முயற்சிசெய்து, எப்படியாவது யானையை அடக்குமாறு நான் கட்டளை யிட்டதாகப் போய்க் கூறு” அவன் காவலனை ஏவினான். காவலன் பாகர்களைத் தேடி ஓடினான்.