பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

85


வாழ்க்கை. இதுதான் எலியின் வாழ்வு திருட்டுத்தனத்தோடு கூடிய அர்த்தமில்லாத அற்ப வாழ்வு. மனிதர்களிலும் இப்படி எலிகள் இருக்கின்றனர். பிறரை ஏமாற்றித் தன்னையும் ஏமாற்றிக் கொள்கின்ற மனித எலிகள் அநேகம் இப்படிப்பட்ட எலிகள் நமக்கு நண்பர்களாகலாமா? கூடாது? கூடாது! கூடவே கூடாது! வாழ்க்கை என்றால் அதற்கு மனம் வேண்டும். அந்த மனத்தில் மானம் வேண்டும் மனமும், அதில் மானமும் இல்லாமல் என்ன வாழ்வு வேண்டிக்கிடக்கிறது? மானமில்லத சிறிய கேவலமான திருட்டு முயற்சியால் வாழ முயல்வதைக் காட்டிலும் சாவது எவ்வளவோ உயர்வாக இருக்குமே! போகட்டும்.

எலியின் கதையைப் பார்த்தாகிவிட்டது. இனிமேல் புலியின் கதையைப் பார்ப்போம். புலியை வயலில் பார்க்க முடியாதே! இன்னும் கொஞ்சம் அடர்ந்த காட்டிற்குள் போவோம்.அதோ ஒர் அடர்ந்த புதர் அந்தப் புதருக்கு எதிரே உள்ள மரத்தின்மேல் ஏறி உட்கார்ந்து கொள்வோம்!

‘ஆ! அதென்ன? அந்தப் புதருக்கு அருகில் கருமையாக ஏதோ சிறு குன்றைப்போல் அசைகின்றதே? அது ஒரு யானை அங்கே புதருக்கு அருகில் மேய்ந்து கொண்டிருக்கிறது. சிறிதுநேரம் ஆயிற்று. புதருக்குள் செடி கொடிகள் அசைகின்றன. ஏதோ சலசலப்பு உண்டாகிறது. யானை மிரண்டுபோய்த் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்கிறது. புதரில் சலசலப்பு அதிகமாகின்றது.

அடுத்த விநாடி காடே அதிர்ந்து போகும்படி பெரிய கர்ஜனை புதருக்குள் இருந்து கிளம்புகின்றது. யானை மிரண்டு ஒட அடியெடுத்து வைப்பதற்குள் புதருக்குள்ளிருந்து பெரிய வேங்கைப்புலி ஒன்று அதன் மத்தகத்தில் வேகமாக மோதிப் பாய்கிறது. யானையின் குரூரமான பிளிறலும், பசிமிக்க வேங்கையின் போர் முழக்கமும் காட்டையே கிடுகிடுக்கச் செய்கின்றன. யானை புலியைத் தாக்க, புலி யானையைத் தாக்க ஒரே இரத்தக் களறியாயிற்று. புலிக்கு வலிமை அதிகம். போதாத குறைக்கு அப்போது அதற்குப் பசி நேரம் வேறு. யானையின் ஆற்றல் அதற்குமுன் எடுபடவில்லை. மத்தகத்தைப் பிளந்து தன்