பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

புறநானூற்றுச் சிறு கதைகள்


வெறிக்கு யானையின் உயிரை இரையாக்கிக் கொள்ளத் துடித்தது புலி யானை கொஞ்சம் கொஞ்சமாக உயிரொடுங்கி ஈனஸ்வரத்தில் அலறிக் கொண்டு புவியின் இடது பக்கம் பொத்தென்று வேரற்ற மரம்போல விழுந்துவிட்டது.

என்ன ஆச்சரியம்? புலிக்கு நல்ல பசியாக இருந்தும் அது யானையை உண்ணவில்லை. யானை இடப்பக்கம் விழுந்திருக் கிறது என்பதைப் பார்த்துக் கொண்டே பேசாமல் போய் விட்டது. புலியினிடத்தில் மானம் நிறைந்த ஒரு பண்பு உண்டு! தான் கொன்ற பிராணி தனக்கு வலது பக்கத்தில் விழுந்தால்தான் உண்ணும். இடது பக்கம் விழுந்தால் தனக்குத் தோல்வி என்று கருதி உண்ணாது இன்னும் சிறிது நேரம் அங்கே தாமதித்துப் பார்க்கிறோம். புலி யானையை உண்ணாமல் அங்கேயே வட்டம்போட்டுக் கொண்டிருக்கிறது. சிறிது நேரத்தில் அந்தப் பக்கமாக ஒரு காட்டுப் பசு வருகிறது.புலி பதுங்கிப் பதுங்கி அந்த பசுவின்மேல் குபிரென்று பாய்கிறது. பசுவை அடித்துத் தள்ளுகிறது. இறந்துபோன காட்டுப் பசு புவியின் வலது பக்கம் விழுகிறது. புலி மகிழ்ச்சியோடு அந்தக் காட்டுப் பசுவைத் தனக்கு உணவாக உண்பதற்காகத் தன் குகைக்கு இழுத்துச் செல்கின்றது. ஆகா! இந்தப் புலிக்குத்தான் எவ்வளவு மானப் பண்பு மனம் என்றால் அதில் இப்படியல்லவா ஒரு மானப் பண்பு அமைந்திருக்க வேண்டும் இதுதான் புலியின் கதை இப்போது சொல்லுங்கள் திருடி ஒளித்துவைக்கும் எலிபோன்ற கேவலமான நண்பர்கள் வேண்டுமா? மானமே பெரிதென்று எண்ணி உணவை உண்ண மறுக்கும் புலி போன்ற நண்பர்கள் வேண்டுமா? சோழ அரசன் நம்மை நோக்கிக் கேட்கிறான். நாம் என்ன சொல்லுவோம்? சந்தேகமென்ன? ‘புலி’ என்றுதான் சொல்லுவோம்.

சிறுமையைச் செய்து சிறுமையை அடையும் எலிய சிறுமையை வெறுத்துப் பெருமையை அடையும் புலி இரண்டில் புலிதானே சிறந்தது!