பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

89


“இல்லை, பிசிராந்தையாரே! இந்த அழியா இளமையின் காரணம் ஏதோ பெரிய இரகசியமாகத்தான் இருக்க வேண்டும். சர்வ சாதாரணமாக இருக்க முடியாது.”

“என் மனைவி மாட்சிமை நிரம்பியவள். எனக்கு மக்களும் உள்ளனர். அவர்கள் அறிவு நிரம்பிய மக்கள். என்னுடைய ஏவலாளர்கள் ஒருபோதும் என் கருத்துக்கு மாறாக நடந்து கொண்டதில்லை. எம்நாட்டு அரசன் தீமை புரியாத நல்வழியில் நடக்கிறான். சான்றோர்கள் நிறைந்த நல்ல ஊரில் நான் வாழ்கிறேன்!”

“அது சரி. இவைகளுக்கும் உம்முடைய இளமைக்கும் என்ன ஐயா சம்பந்தம்?”

“சம்பந்தம் இருப்பதனால்தான் சொல்லுகிறேன்!”

“அந்தச் சம்பந்தம் எங்களுக்குப் புரியவில்லையே?”

“புரியாதுதான்! புரிய வைக்கிறேன்! கேளும்”

“சொல்லுங்கள் கேட்கிறேன்.”

“உடல் மூப்பு அடைவதும், அடையாததும் மனத்தைப் பொறுத்து அமைகின்றது. கவலைகள் குறைந்து மனம் உற்சாகமாக இருந்தால், ஒருவனுடைய உடலும் உற்சாகமாக இருக்கிறது. எனக்கு மனைவியாலும் கவலை இல்லை, மக்களாலும் கவலை இல்லை. ஏவலாளர்களாலும் கவலை இல்லை. என் நாட்டு அரசாட்சியினாலும் கவலை இல்லை. என்னைச் சுற்றி வாழுகின்றவர்களாலும் கவலை இல்லை. சான்றோர்களின் அறிவைப் பருகி என் மனம் புஷ்டியாக இருக்கிறது. ஆகவே இளமை நிறைந்து இருக்கிறது.”

“அப்புறம்.”

“மனம் நரைக்கவில்லை; திரைக்கவில்லை; சுருங்கவில்லை; தளரவில்லை; தாழவில்லை! அதனால், உடலும் நரை திரை சுருக்கம், மூப்பு, முதிர்ச்சிக்கு ஆளாகவில்லை. இப்போது புரிகிறதா புதிர்”