பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

புறநானூற்றுச் சிறு கதைகள்


“புதிர் புரிகிறது! ஆனாலும், உம்முடைய இளமை அதிசயமானது! அற்புதமானது அறுபத்தெட்டு வயதை முப்பது வயதாகக் காட்டும் அளவிற்கு உயரியது.”

“ஏதோ, என் பாக்கியம்! இதை நினைத்து நான் ஒரேயடியாகப் பெருமைப்படுவதில்லை!”

“பெருமை, சிறுமை உணர்வுகளை வென்றதனால்தானே நீர் இந்த இளமையைக் காப்பாற்றுகிறீர்.”

“இருக்கலாம்!” பிசிராந்தையார் வேண்டா வெறுப்பாகப் பதில் கூறினார்.

சந்தேகமென்ன? இளமைக்கு மனம்தான் காரணம்!

யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்என வினவுதிர் ஆயின்
மாண்டளன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே! (புறநானூறு -191)

யாண்டு = வருஷம், வினவுதிர் = கேட்பீர், மாண்ட = மாட்சிமை உடைய, இளையர் = ஏவலர்கள், அல்லவை=தீமைகள், ஆன்றவிந்து = பெற்றடங்கி, சான்றோர் = அறிவாளிகள்.


20. இந்த உலகம்

நன்கணியார் தெருவழியே நடந்து கொண்டிருந்தார். தெருவில் யாரோ ஒருவர் வீட்டில் கலியாணம் போவிக்கிறது. வாத்தியக்காரன் மங்கலமயமான இராகத்தைத் தெருவெல்லாம் கேட்கும்படி வாரியிறைத்துக் கொண்டிருந்தான். வீட்டு வாசலில் அழகான பெரிய பந்தல், பந்தல் தூண்களில் வாழை மரங்கள்;