பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புறப்பொருள் வெண்பாமாலை

மூலமும் உரையும்


கடவுள் வாழ்த்து

எடுத்துக்கொண்ட செயல் இனிது நிறைவெய்துதலின் பொருட்டாகக் கடவுளருளைப் போற்றிப் பாடுவது இது. இதன்கண் ஆனைமுகனையும், சிவபிரானையும், கலைமகளையும் ஆசிரியர் போற்றுகின்றார்.

ஆனைமுகன்

நடையூறு சொன்மடந்தை நல்குவது நம்மேல் இடையூறு நீங்குவது மெல்லாம் - புடையூறும் சேனைமுகத் தாளிரியச் சீறுமுகத் தூறுமதத் தானைமுகத் தானைநினைத் தால்.

- 1

'பகுதி பகுதியாக மேன்மேல் வந்துகொண்டிருக்கின்ற எதிரிகளின் படைமுகத்திடத்தே, அவ் வீரர்கள் அனைவரும் அச்சமுற்றவராக ஒடிப்போகுமாறு, சீற்றங்கொள்ளுகின்ற திருமுகத்தை உடையவன் ஆனைமுகவன். சுரக்கின்ற மத நீரினையும் அவன் கொண்டிருப்பவன். அவனது திருவடிகளை நினைத்தால், சொன் மடந்தையானவள் நடைவளம் சுரக்கின்ற ஆற்றலினைத் தந்தருளுவாள்; அல்லாமலும், நம்மேல் வந்துறுகின்ற இடையூறுகள் எல்லாம் நம்மைவிட்டு நீங்குவதும் உண்டாகும்.'

'நடை' என்பது, நூலிடத்தே பயின்று வருவதான சொல்லமைதியின் இனிதான செறிவோடுங்கூடிய ஒழுக்கம், ஆனைமுகத்தானை நினைத்தால், விக்கினங்களைப் போக்குபவனாகிய அவனருளால், இடையூறுகள் அனைத்தும் விலகும் என்பதனுடன், அவனருளைப் பெறும்போது கலைமகளின் திருவருளும் வந்தெய்தும் என்றனர். விநாயகப் பெருமான் அகர உகர மகாரமாகிய ஓங்கார வடிவினன் ஆதலின், அவனருளால் அகர முதலாகிய எழுத்தெல்லாம் வளத்துடன் வந்தெய்தப் பெறுதலும் கூடும் என்பது இது.முகம் இடம்; இங்கே படைமுகம் ஆள் என்றது, எதிர்த்து வந்த பகைவீரரை, அவர் இரியச் சீறும் என்றதனால்,அச்சீற்றத்தினுக்கே அஞ்சியவராகிப் போரிடாதே பகைவர் ஒடிப் போவர்” எனப் பெருமானது பெருந்திறலைக் குறித்தனர். நாமும் இத்தகைய பெருமானது துணையைப் பெற்றனமானால், நம்பால் எதிரிட்டு வருகின்ற பகைகளும் அங்ங்னமே விலகிப்போம் என்பது கருத்து.