பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும்

சிறப்புப் பாயிரம்

மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்
தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன்முதற்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன்
ஓங்கிய சிறப்பின் உலகமுழு தாண்ட
வாங்குவில் தடக்கை வானவர் மருமான்
ஐயனாரிதன் அகலிடத் தவர்க்கு
மையறு புறப்பொருள் வழாலின்று விளங்க
வெண்பா மாலை யெனப்பெயர் நிறீஇப்
பண்புற மொழிந்தனன் பான்மையின் தெரிந்தே.

'நிலைபெற்ற சிறப்பினை உடையவரான வானோர்கள் வேண்டிக் கொள்ளுதலினாலே, தென்மலையாகிய பொதியத் திடத்தே வந்து வீற்றிருந்தவர், சீர்மை நிறைந்த முனிவராகிய அகத்தியர். அவரிடத்தே தண்மை செறிந்த தமிழ் மொழியின் நுட்பங்களைப் பழுதின்றிக் கற்றுணர்ந்த கிடைத்தற்கரிய புகழினைப் பெற்றவர்கள், தொல்காப்பியர் முதலாகிய பன்னிரு புலவர்களும் ஆவர்.அவர்கள் பகுதியோடும் அமையச் சொல்லிய புறப்பொருள் நூல் 'பன்னிரு படலம்' என்பது. அந்நூல் முழுவதனையும் குற்றமின்றிக் கற்றுணர்ந்த சிறப்பினை உடையவர் ஐயனாரிதனார் என்னும் இவர். உயர்ந்த மேம்பாட்டினையுடைய உலகம் முழுவதையுமே ஆட்சி செலுத்தி வந்த வரும், வளைந்த வில்லினைத் தம் பெரிய கையிடத்தே கொண்டோருமான சேரர் குடியினரின் வழி வந்தவரும் இவராவர். அகற்சியை உடைய நிலப் பரப்பினதான தமிழ்நாட்டின் கண் உள்ளவர்க்குக் குற்றமற்ற வகையிலே புறப்பொருள் இலக்கணம் வழுவின்றி விளங்கும் பொருட்டாக, வெண்பாமாலை என்னும் பெயரினை இட்டு, அப் பொருளினை முறையோடும் தெளிந்தவராக, நூற்பண்பு பொருந்த, அவர் இதனைச் சொல்லியருளினர்'.