பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும்

இது கண்டோர் கூற்று. வெற்றி முரசின் முழக்கமும், களிற்றின் முழக்கமும், வஞ்சி புனைதலுடன் எழ, இது வஞ்சியரவம் ஆயிற்று. 'களிறு அதிரும்’ என்றதனால், பிற படைப்பகுதிகளும் அங்ஙனமே ஆரவாரிக்கும் என்பதும் கொள்க.

2. குடை நிலை

பெய்தாமஞ் சுரும்பிமிரப் பெரும்புலவர் புகழ்பாடக்
கொய்தார் மன்னவன் குடைநாட்கொண்டன்று.

தன்மேல் இட்டிருக்கின்ற மாலைகளிலே வண்டினம் ஆரவாரிக்கவும், மிக்க அறிவினை உடையவரான புலவர்கள் தன்னுடைய புகழினைப் பாடவுமாக, கத்தரிகையால் மட்டஞ்செய்த தாரினையுடைய வேந்தனானவன், தன் கொற்றக் குடையினை நல்ல வேளையிலே புறவீடு விடுவது, குடைநிலை ஆகும்.

'தாரினைக் கட்டியபின் கத்தறித்து மட்டஞ்செய்து அணிவதும் வழக்கம்' என்பதனைக் கொய்தார் என்பது காட்டும். 'குடைநாட்கொள்ளல்' குடைநிலை.

முன்னர் முரசிரங்க மூரிக் கடற்றானைத்
துன்னருந்துப்பிற் றொழுதெழா - மன்னர்
உடைநாள் உலந்தனவால் ஒதநீர் வேலிக்
குடைநாள் இறைவன் கொள. - 38

தன் முன்னே வீரமுரசு முழங்க, எம் இறைவன், திரைமிகுந்த கடலினை வேலியாக உடைய உலகினிடத்தே, குடைநாட் கொள்ளுதலைச் செய்தனன். செய்யப், பெரிய கடல் போன்ற படையினையும், கிட்டுதற்கரிய வலியினையும் உடையராயிருந்த நிலையால், எம் அரசனைத் தொழுதெழலைச் செய்யாது செருக்கியிருந்த மன்னர்களது வாணாளும் கெட்டன.

'புறவீடு விட உடைநாள் உலந்தன' என்க. 'குடை நாள் இறைவன் கொள' எனக் குடைநிலை இதன்கண் கூறப்பட்டது.

3. வாள் நிலை

செற்றார் மேற் செலவமர்ந்து
கொற்ற வாள்நாட் கொண்டன்று.

பகைவரது நாட்டின்மேற் படையெடுத்துச் செல்லுதலை விரும்பிய மன்னன், தன் வெற்றிவாளினை நல்ல முழுத்தத்திலே புறவீடு விடுவது, வாள்நிலை ஆகும். வாள் நாட்கொள்ளல் 'வாள்நிலை' ஆயிற்று. செற்றார்-பகைவர்.