பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்_k வஞ்சிப் படலம் 43 அழலடைந்த மன்றத் தலந்தயரா நின்றார் நிழலடைந்தே நின்னையென்றேத்திக்-கழலடையச் செற்றங்கொண்டாடிச் சிலைத்தெழுந்தார் வீந்தவியக் கொற்றங்கொண் டெஃகுயர்த்தான் கோ. 42 எங்கள் கோமான், சினத்தைப் பாராட்டிக் கோபித்துப் பகைத்து வந்தாரான பகைமன்னர் எல்லாரும் களத்திலே வீழ்ந்துபட்டுத் தம்முடைய பெயரும் கெட்டுப்போமாறும், நெருப்புப் பொருந்திய பகைநாட்டு அம்பலத்திடத்தே நொந்து நெஞ்சழிய நின்றவர் நின்னை எம் நிழலாக அடைந்தேம் என்று போற்றித் தன் அடிகளை வந்தடையுமாறும் கொற்றத்தினை மேற்கொண்டு, தன்னுடைய வேலினை வலமாக உயர்த்தினான். அரசன் வேலினை உயர்த்த, அவனது கொற்றத்தைப் படைமறவர் போற்றிக் கூறுவது இது. அதனால் கொற்ற வஞ்சி ஆயிற்று. சிலைத்து-கோபித்து. வீதல்-படல். அவிய' என்றது, அவருடைய பழைய புகழும்கெட என்பதற்காம். 7. கொற்ற வள்ளை மன்னவன் புகழ்கிளந்து ஒன்னார்நாடு அழியிரங்கின்று. வஞ்சிவேந்தனது புகழினை எடுத்துச்சொல்லி, அவனுடைய பகைவரது நாடு அழிவது குறித்து வருந்துவது, கொற்றவள்ளை' ஆகும். தம் மன்னனது புகழையும், பகைநாட்டது அழிவையும் ஒருங்கே பாடுதலின் கொற்ற வள்ளை' என்பதாயிற்று. தாழார மார்பினான் தாமரைக்கண் சேந்தனவாற் பாழாய்ப்பரிய விளிவதுகொல்-யாழாய்ப் புடைத்தேன் இமிர்கண்ணிப் பூங்கட் புதல்வர் நடைத்தேர் ஒலிகறங்கும் நாடு. 43 யாழையொப்ப இசையொலி செய்தனவாகப் பக்கங்களிலே வண்டினங்கள் ஆரவாரிக்கின்ற மாலையினையும், பொலிவினை யுடைய கண்களையும் உடையவரான சிறுவர்களின், சிறுதேர் உருளுகின்ற ஒலியானது முழங்கிக் கொண்டிருக்கும் வளமுடையது பகைவரது நாடு. ஆரந் தாழ்ந்த மார்பினை உடையவனான நம் மன்னனது தாமரை மலர் போன்ற கண்கள் சினத்தாற் சிவந்தனவாதலினால், இனி அதுவும் பாழ்பட்டதாகிக் கண்டார் இரங்கும்படியாகக் கெட்டழியும் போலும்!