பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள் வெண்பா மாலை முன்னுரை அருமைமிகு தமிழ்மொழியின் அமைதியினை வரையறுத்துக் கண்ட ஆன்றோர்கள், தமிழ் இலக்கணத்தையும் செறிவுடன் அமைத்துச்செந்தமிழின் செழுமையினைப் பேணினார்கள்.அந்த இலக்கணச் செறிவுள் அகம், புறம் என வகுத்து உரைக்கப்படும் ஒழுக்கங்களுள், புறவொழுக்கத்தினை விளக்கிச் செல்வது,இந்தப் புறப்பொருள் வெண்பாமாலை ஆகும். தென் பொதியத்தே வீற்றிருந்து தமிழ் நலம் பெருக்கிய குறுமுனிவரின் மாணாக்கர்கள் பன்னிருவரும் செய்த பன்னிரு . படலம் என்னும் பழந்தமிழ்ப் பெருநூலை முதலாகக் கொண்டு, அதன் வழி நூலாக எழுந்தது இதுவென்பார்கள். இதனை ஆக்கியருளியவர் சேரர் குடியிலே வந்தவரான ஐயனாரிதனார் என்பவர். இவை, இந்நூற்பாயிரத்தில் அறியப்படுவன. திணைகளை விளக்கும் சூத்திரங்களையும், அச் சூத்திரங்களுள் கூறப்படும் திணை துறைகளுக்கு இலக்கியமாக அமையும் வெண்பாக்களையும், அவ்வெண்பாக்களின் கருத்தைத் தனியே புலப்படுத்தி ஒவ்வொரு வெண்பாவின் முன்னரும் நிற்பனவாகிய கொளுக்களையும், கொண்டு திகழ்வது இந்நூல். இவற்றுள், கைக்கிளைப் படலத்து இலக்கியச் செய்யுள்கள் மருட்பாக்களாக அமைந்துள்ளன; ஒழிபினிடத்துள்ள வெண்பாக்களுக்கு முன்னர்க் கொளுக்கள் எதுவும் காணப்பெறவில்லை. வெண்பாவிற் புகழேந்தி’ என்னும் சான்றோர் வாக்கினை நாம் அறிவோம். எனினும், ஐயனாரிதனாரின் வெண்பாக்களை நோக்கும்போது, இவற்றின் செழுமையும் இனிமையும் நம்மைப் பெரிதும் தமிழின்பத்தே திளைத்துக் களிகொள்ளச் செய்கின்றனவாதலை நாம் காணலாம். - இந் நூலுக்குச் சாமுண்டி தேவநாயகர் இயற்றிய பழைய உரையொன்றும் உளது. மிகவும் செப்பமாகவும் திட்பமாகவும் அமைந்து அவ்வுரை விளங்குகின்றது. அதன் பொருண்மைச் செறிவினை எளிதாக அறிந்து பயன் பெறுவதற்கு உதவும் வண்ணம் வெளிவருவதே இந்நூல் எனலாம்.