பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் தாங்கன்மின் தாங்கன்மின் தானை விறன்மறவிர் ஓங்கன் மதிலுள் ஒருதனிமா-ஞாங்கர் மயிரணியப் பொங்கி மழைபோன்று மாற்றார் உயிருணிய ஓடிவரும். - 90 தானையிடத்துள்ள வெற்றி மறவர்களே! மலைபோன்ற மதிலினுள்ளாக விருந்த ஒப்பற்றவொரு குதிரையானது, தனது பக்கத்தே கவரிமயிரினையிட்டு ஒப்பனை செய்யப் பொங்கி எழுந்து, மேகத்தையொத்துப் பகைவருயிரை உண்ணும் பொருட்டாக விரைய ஓடிவரும். அதனைத் தடுத்தலைச் செய்யாதீர்கள் தடுத்தலைச் செய்யாதீர்கள்! அதனைத் தடுத்தல் அரிது’ என்பது கருத்து. மேகம் நீரையுண்ணுமாறு போலக் குதிரையும் பகைவரது உயிரை உண்ணும் என்பது கூறப்பட்டது. இது குதிரையினது மறமாண்பைக் கண்டார் கூறியது. - 5. எயிற்போர் அயிற்படையின் அரண்காக்கும் எயிற்படைஞர் இகல்மிகுத்தன்று. கூர்மையான படைக்கலன்களாலே அரணிடத்தைக் காத்திருக்கும், மதிலிடத்துப் படைமறவர்களது மாறுபாட்டைப் புகழ்ந்து கூறுவது, எயிற்போர் ஆகும். மிகத்தாய செங்குருதி மேவரு மார்பின் உகத்தாம் உயங்கியக் கண்ணும்-அகத்தார் புறத்திடைப் போதந் தடல்புரிந்தார் பொங்கி மறத்திடை மானமேற் கொண்டு. 91 மதிலின் அகத்தாரான நொச்சிமறவர்கள், பெருகப் பரந்த செங்குருதியானது பொருந்தின தம் மார்பினின்றும் வீழாநிற்பத் தாம் வருந்தியவிடத்தும், சினம் பொங்கியவராகத், தம் மறத்திடையே மானத்தையே மேற்கொண்டவராக, மதிலின் புறத்தே போந்து தம் பகைவரைக் கொல்லுதலையே விரும்பா நின்றனர். மானமாவது, எஞ்ஞான்றும் தந்நிலையில் தாழாமையும், தெய்வத்தால் தாழ்வு வந்தவிடத்து உயிர்வாழாமையும் என்பர். அதனை மேற்கொண்டு, தன் உடலழிவையுங் கருதாது, போரிடலை விரும்பினர் என்க. மேவரு மார்பு-உறுப்பிலக்கணம் பொருந்த விளங்கிய பரந்த மார்பும் ஆம்