பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



1. அருணோதயம்

வைகறை நேரம். ஞானமும் அஞ்ஞானமும் இணைந்தாற்போல ஒளியும் இருளும் கலந்து உறவாடும் நேரம். எங்கும் இளம்பனி பெய்து கொண்டிருந்தது. புல்லின் நுனிகள் வைரமுடி தாங்கி ஒளிர்ந்தன. காலை நேரத்துக் குளிர்ந்த காற்று, ஆலமரத்தின் தளிர் இலைகளை மெல்லக் 'கிசு-கிசு' செய்து கொண்டே ஓடிற்று.

புலர்ந்தும் புலராத அந்த இனிய பொழுதைச் சுவாமிமலை மக்கள் உறக்கத்தில் கழித்துக் கொண்டிருந்தனர். கீழைத் தெருவில் இருக்கும் மகாவித்துவான் சுப்பராம பாகவதரின் வீடு மட்டும் விழித்துக் கொண்டிருந்தது. பாகவதருடைய பிரதம சிஷ்யன் ஹரி தம்பூராவை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தான். அவன் நெற்றியில் அணிந்திருந்த திருநீற்றின் நறுமணம் அறை முழுவதும் கமழ்ந்தது. அவன் உடம்பெல்லாம் மணத்தது. அவன் மனம் குருவின் தியானத்தில் நிரம்பி வழிந்தது.

உயிர்பெற்ற விரல்கள் தழுவிக்கொண்டிருந்த தம்பூராவின் தந்திகளை வருடின. மறுகணம் அலையலையாகப் பரவிய நாதவெள்ளம் நிறைந்து வீடு முழுவதும் பரவி, வெளியெங்கும் வழிந்தது. அந்த இனிய நாதத்தில் தன்னை மறந்து, சுருதியுடன் இணைந்து, கணிரென்று பாடிய ஹரியினுடைய குரல் தேவகானமாக ஒலித்தது, அந்த இன்னிசையில் இளந்தென்றல் தவழ்ந்தது.

மெல்லிய துயில் நீங்கி அன்னை காவிரி சிறு சலசலப்புடன் சென்று கொண்டிருந்தாள். அழகிய கரிய கூந்தலைப்போல, ஆற்றின் இரு மருங்கிலும் நீண்டு ஒயிலாகக் கரிய