பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 புல்லின் இதழ்கள்

முடியும் என்பது அவளுக்கு நன்கு புரிந்தது. ‘என்றைக்குத் தலையில் கல் விழப்போகிறதோ?’ என்று நடுங்கிக் கொண்டேதான் இருந்தாள்.

இடுப்பில் சில்க் கைலியும், பச்சைப் பட்டைப் பெல்ட்டும், ஹாங்காங் பனியனுமாகக் காட்சியளிக்கும் பக்கிரி அந்தப் பிராந்தியம் முழுவதும் பிரபலமாகியிருந்தான். எப்போதும் பத்து நண்பர்கள் அவனைச் சுற்றிலும் இருப்பார்கள். அவன் பழகுவதையும். இனிக்க இனிக்கப் பேசுவதையும் கண்டு மயங்காதவர் இல்லை. ஊரிலிருந்து எவ்வளவு புதையல் கொண்டு வந்தானோ அதை எங்கே புதைத்து வைத்திருக்கிறானோ அது பக்கிரிக்குத்தான் வெளிச்சம். ஆனால், இடுப்புப் பெல்ட்டில் எப்போதும் பணம் இருந்துகொண்டே இருக்கும்.

அந்த ஊரிலுள்ள டீக்கடைக் காரனுக்குச் சிங்கப்பூர்ப் பக்கிரி கண் கண்ட தெய்வம். கடை வாசலில் யாருடனோ கம்பீரமாக நின்று கொண்டு டேய் காளி, சைனா டீ இரண்டு போடு. அர்ஜண்ட்!” என்று ஆர்டர் கொடுக்கிற அழகும், குடித்து முடித்ததும் இடுப்பிலுள்ள பெல்ட்டைத் திறந்து புத் தம் புதுப் பத்து ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டி அங்கே நிற்கும் தன் நண்பர்களுக்கெல்லாம் சேர்த்துத் தானே டீக்குப் பணம் கெடுத்து விட்டு, ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு போய் விடுவதும் டீக்கடைக் காரனுக்குக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இதனால் பக்கிரியுடன் சுற்றுவதற்காகவே சிலர் ஆசைப்பட்டனர். வயிற்றுக்கு வஞ்சனையில்லாமல் சாப்பிடுவான்; பிறருக்கும் வாங்கித் தருவான். ‘தஞ்சாவூர் மிலிடரி ஹோட்டலி'ல் பக்கிரிக்குப் பற்று வரவே இருந்தது. ஆனால் அவன் உள்ளுரில் என்ன தொழில் செய்கிறான்; இன்னும் இவனிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்னும் விவரம் யாருக்கும் தெரியாது.