பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. பொருள் கிடைத்தது

தன் திட்டங்களைத் தவிடு பொடியாக்க வேண்டு மென்று ஏதோ ஒரு சக்தி கங்கணம் கட்டியிருப்பது போல் ஹரிக்குத் தோன்றியது. திடீரென்று பசு கத்துமென்றோ, காயத்திரி எழுந்து செல்லுவாள் என்றோ அவன் எண்ணவே இல்லை.

கூடவே தானும் எழுந்து போய்ப் பார்க்க எண்ணி னான். ஆனால் இப்போது அங்கே எப்படிப் போவது? “என்ன நேர்ந்தாலும் தான் இந்த இடத்தை விட்டு எழுந்திருப்பது உசிதமல்ல. கொல்லையில் சிங்கப்பூர்ப் பக்கிரி நின்றிருப்பதைப் பார்த்துக் காயத்திரி பயந்து கூச்சல் போட்டால் பிறகு எழுந்து போகலாம் என்று. மனத்தை அடக்கிக் கொண்டு படுத்துக் கிடந்தான்.

காயத்திரி கொல்லைக் கதவுகளை திறந்து கொண்டு போன போது பரம சாது போல் தொழுவத்தில் நின்ற பசு அவளைப் பார்த்து ஆசையோடு கழுத்தை நீட்டியது. போக்கிரி, பாதி ராத்திரி வந்து உனக்குச் சொரிந்து கொடுக்க வேண்டுமாக்கும்? இதற்காகவா இப்படிக் கத்தி எல்லாரையும் எழுப்பினாய்?’ என்று கழுத்தையும், இரண்டு கொம்புகளுக்கு மத்தியிலும் சிறிது நேரம் சொறிந்து கொடுத்தாள். பசுவும் அந்தச் சுகத்தில் தலை யைப் பக்குவமாக நாலாப்பக்கமும் திருப்பித் திருப்பிக் காட்டியது. காயத்திரி கையை எடுத்தவுடன் கன்றுக்குட்டி “ம்மே” என்று பெரிசாகக் கத்தியது.