பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நினைவுச் சுழல்

அன்பு என்றால் என்னவென்று ஹரிக்குத் தெரியாது. அதனால் அடையும் இன்பத்தையும் அவன் சுவைத்ததில்லை. துன்பத்தின் துணையோடு, கடவுளின் அருளோடு மட்டுமே உலகில் வந்தவன் அவன்.

பாகவதரிடம் வருவதற்கு முன்பு அவனுடைய பூர்வா ரெமப் பெயர் கண்ணப்பன். காஸ் விளக்குச் சுமக்கும் பணி புரியும் பெரியசாமியின் மூத்த மனைவிக்குத் தலைமகனாகப் பிறந்தவன். கொள்ளிடக் கரையில் உள்ள அரசூர்தான் அவன் ஊர். அங்கேதான் அவன் குடும்பம் இருக்கிறது. வயதைப்பார்த்து அவனைப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்காவிட்டாலும், நிலைமையைப் பார்த்துக் குடும்பப் பாரத்தை அவன் தலைமேல் சுமத்தப் பெரியசாமி தவற வில்லை. மகனை ஒரு மளிகைக் கடையில் கொண்டு போய்ச் சேர்த்தான். பையன் ஒழுங்காக வேலை செய்ய வில்லை; பக்கத்து ஹோட்டலில் அடிக்கடி கிராம போன் பாட்டுக் கேட்கப் போய் விடுகிறான் என்று மளிகைக் கடைக்காரர் அவனைத் துரத்தி விட்டார்.

பிறகு கண்ணப்பனை அந்த ஹோட்டலிலேயே எடுபிடி வேலைக்கு விட்டான். இடுப்பு முறிந்ததே தவிரப் பாட்டுக் கேட்க முடியவில்லை; அங்கிருந்து அவனாகவே ஒடிப் போய்விட்டான். அதன் பிறகுதான் அவன் தந்தை அவனைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து, உருப்படாத பயலே, உன்னை முன்னுக்குக் கொண்டுவர நெனச்சா உன் தலையிலே இது தான் எழுதியிருக்கும் போலிருக்கு: இந்தா, பிடி!’ என்று சொல்லி, பேபி பெட்ரோமாக்ஸை தூக்கித்