பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. திருமணப் பேச்சு

நாள்தோறும் நடக்கும் நிகழ்ச்சிகள் சந்தர்ப்ப விசேஷத்தால் அரிய நிகழ்ச்சிகள் ஆகிவிடுகின்றன அல்லவா? சுந்தரிக்கும் அவ்வாறே நேர்ந்தது.

பாகவதர் உடல்நலக் குறைவுற்றது முதல் , அவரோடு அவள் தனித்துப் பேசவே முடியவில்லை. அவள் வருகிற நேரத்தில் யாராவது பாகவதரோடு இருந்து கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் அவள் என்ன பேச முடியும்? ஆனால் ஆரம் பத்தில் இதை அத்தனை பெரிய விஷயமாகக் கருதாத சுந்தரிக்கு; பேச வேண்டிய தேவை ஏற்பட்ட போது, அதுவே பெரிய விஷயமாகி விட்டது. மனம் விட்டுப் பேசக் கூட வாய்ப்பே இல்லாமல் போயிற்று.

வசந்தி-ஹரி, திருமண விஷயமாக அவள் ஜாடை மாடையாகப் பாகவதரிடம் குறிப்பிட்டிருக்கிறாள். பாகவதரும் அதை நல்ல ஏற்பாடென்றே ஆமோதித் திருந்தார். ஆனால் அதற்காக எந்த முயற்சியையும் அவர் மேற்கொள்ளவில்லை.

இப்போது அதுபற்றி மீண்டும் பேச்சு வார்த்தைகளைத் துவக்கி, விரைவிலேயே முடிவு கண்டுவிட வேண்டுமென்று சந்தர்ப்பத்தை சுந்தரி ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த எதிர்பாராத வாய்ப்பு அன்று அவளுக்குக் கிட்டியது.

வீட்டுக்குள் நுழைந்த சுந்தரியைக் கண்டதும் லட்சுமியம்மாளுக்கு மிகவும் சந்தோஷமாகப் போய் விட்டது.