பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 புல்லின் இதழ்கள்

ஹரியிடம் இப்போதெல்லாம் வசந்தி முன்போல் அதிகம் எதிர்வார்த்தை யாடாமலும், அரட்டை அடிக் காமலும், பாடத்துக்கு வந்தால் மிகவும் சிரத்தையுடன் நடந்து வந்தாள். திருமணப் பேச்சுக்களைத் தன் தாய், அப்பாவுடன் முடித்துக் கொண்டு வந்ததை அவள் அறிவாள். அறிந்ததிலிருந்தே ஹரியைப் பார்க்கும் போதெல்லாம் வசந்திக்கு ஒருவித நாணம் பிறந்துவிடும். ஆனால் அவன் இதற்கு எவ்வித மதிப்போ பொருளோ கொடுக்காமல் தன் கடமையை மட்டும் செய்துவிட்டுக் கண்ணியமாகச் சென்று கொண்டிருந்தான். வசந்தியும் சுந்தரியும் எத்தனை முயன்றும் ஹரியின் உள்ளக் கிடைக்கையயோ, வசந்தியை மணந்து கொள்வது பற்றிய அவன் கருத்தையோ, அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. எல்லாவற்றுக்கும் எப்போதும் சிரித்து மழுப்புகிற புன்னகை ஒன்றுதான் அவளுடைய பதிலாக இருந்தது. அந்த மழுப்பலின் அடித்தளத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக வசந்தியின் சூட்சும புத்திக்குத் தென் பட்டது. ஆனால் வெளுத்ததெல்லாம் பாலென்று எண்ணும் சுந்தரிக்கு அப்படி எண்ணத் தோன்றவில்லை. ஹரி மனம் விட்டுப் பேச வெட்கப்படுகிறான், கூச்சப் படுகிறான் என்று எண்ணியே ஏமாந்தாள்.