பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைப் போட்டி 297

நான்கு நாளாக ஹரியைக் காணோம் என்றதும் சுசீலா திருவிடைமருதூருக்குப் போய் வந்தாளே தவிர, அங்கே சுந்தரியிடமோ, வசந்தியிடமோ ஹரியைத் தேடிக் கொண்டு வந்திருப்பதாகக் கூறவே இல்லை.

எதேச்சையாக வந்தவள் போல், ஹரி அங்கும் வர வில்லை என்ற விஷயத்தை மட்டும் கிரகித்துக் கொண்டு திரும்பிவிட்டாள். ஆனால் அன்று அப்பாவைப் பார்த்துப் போக வசந்தி சுவாமிமலைக்கு வந்தபோது தான், அவளுக்கு இந்த விஷயமெல்லாம் தெரிய வந்தது.

ஹரியை நான்கு நாளாகக் காணவில்லை. தேடிச் கொண்டிருக்கிறார்கன் என்று அறிந்தவுடன் வசந்தி திடுக்கிட்டுப் போனாள். சொல்லொணாத கவலையும் வேதனையும் அவளைச் சூழ்ந்துகொண்டன. அந்த நிமிஷமே அங்கிருந்து ஒடிப்போய் அம்மாவிடம் இந்தச் செய்தியைக் கூற அவள் உள்ளம் துடித்தது. ஆனால் அங்கே இருந்த அத்தனை பேருடைய கவலையையும் வேதனையையும் விடவா அது முக்கியம்? அப்படி உடனே புறப்பட்டுச் செல்லுவது அப்பட்டமான சுயநலம் அல்லவா என்று அவள் மனமே குத்திக் காட்டியது.

ஆயினும் அவளுக்குச் சுசீலாவின்மீது வந்த கோபத்தை மட்டும் அடக்கவே முடியவில்லை. ஊருக்கு வந்தவள் ஒரு வார்த்தை சொல்லவில்லையே! காயத்திரி அக்காவும் பெரியம்மாவும் இல்லாதபோது சுசீலாவைத் தனியாகச் சந்தித்து, வாய்க்கு வந்தபடிப் பேசித் தீர்த்துவிட வேண்டுமென்று அவள் துடித்தாள். அதற்கான சந்தர்ப்பத்தை அவள் மனம் எதிர்பார்த்துக் கருவிக் கொண்டிருந்தது. ஆனால் சோதனையைப் போல் வசந்தி ஊருக்குப் புறப்பட்டுப் போகிற வரையில் சுசீலா அவள் கண்ணில் அகப்படவே இல்லை.

பு. இ.-19