பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கள் ஒரே ஜாதி 61

புடைவைத் தலைப்பை வாயில் திணித்துக்கொண்டு, அழுகுரல் தன் கணவர் காதுக்கு எட்டிவிடக் கூடாதே என்று, சகோதர பாசம் தாளாமல் உள்ளத்துக்குள்ளேயே குலுங்கக் குலுங்க அழுதாள் லட்சுமியம்மாள்.

ஹரியின் மனவேதனையைப் பற்றி வர்ணிக்கவே இயலாது, அவன் புழுங்கி செத்துக் கொண்டிருந்தான். தனக்காக வீட்டில் உறவினர்களுக்குள் ஏற்பட்ட மனக் கசப்பை அவனால் தாங்க முடியவில்லை; அதே சமயம். தம் உறவினரையும் மதியாமல், அவனுக்கு அவ்வளவு கொளரவம் கொடுத்து ஆதரித்துப் பேசிய குருநாதருடைய அன்பை எண்ணிப் பார்க்கையில் அவரது பாசச் சுமையைத் தாளாமல் அவனது இதயமே வெடித்துச் சிதறிவிடும் போலிருந்தது. -

ஈசுவரா, இத்தனை அன்புக்கும் கருணைக்கும் நான் பட்டிருக்கும் கடனை, இந்தக் குடும்பத்துக்கு எத்தனை ஜன்மங்களில்தான் ஈடு செய்து தீர்க்கப் போகிறேன்? இந்த உடல் - அவர்கள் இட்ட சோற்றால் வளர்ந்து ஆளாகியது: நான் பெற்ற அறிவு - அவர்கள் இட்ட பிச்சை அவர்கள் மனமுவந்து அளித்த ஆசிகள். குருநாதா, உங்கள் அன்பைத் தாங்க என்னால் முடியவில்லை. என் இதயத்துக்கு வலு வைக் கொடுத்தருளுங்கள்’ என்று காவிரி மண்டபத்தில் உட்கார்ந்து ஹரி சிறு குழந்தையைப் போல் விக்கி விக்கி அழுதான். அப்பொழுது தண்ணிர் எடுக்க வந்த சுசீலா இடுப்பில் குடத்து நீருடன் அவனையே பார்த்தபடி நின்றாள்.