பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மனம் செய்த மாயை

நானாவின் அந்த ஒரு வார்த்தை, உறுதியான தோளையும், சதைக் கோளங்களையும், எலும்புக் கவசங் களையும் கடந்து பலமான ஊமையடியாக, பாகவதரின் நெஞ்சின் அடித்தளத்தில் விழுந்துவிட்டது. அந்த அடியின் வேதனையைத் தாங்க முடியாமல் அவர் உள்ளத்துக் குள்ளேயே துடித்தார்.

மனத்தை அடக்கி வசப்படுத்திவைக்கத் தெரியாமல், சபலத்துக்கு இதயத்தில் இடம் கொடுத்து இத்தனை காலமும் வாழ்ந்துவிட்டு, இன்று திடீரென்று யாரோ ஏதோ சொன்னதை நினைத்துக் கொண்டு வருந்துவது கோழைத் தனம் அல்லவா? நானே இப்படி வருந்தினால் என்னை நம்பித் தன் வாழ்வையே ஒப்படைத்திருக்கும் சுந்தரி எப்படிக் கலங்குவாள்? அவளுடைய அழகுக்கும் ஞானத் துக்கும் அவள் விரும்பியிருந்தால் மகாராஜாக்களைக் கூட மணந்திருக்க முடியுமே! இசையின் மீதுள்ள ஆர்வத்தினால் தானே இந்தப் பாடகனை மணந்துகொண்டு தன் சமூகத்தையும் எதிர்த்து வாழ்கிறாள்? இது போன்ற எத்தனை அவதூறுகளை அவன் கேட்டிருப்பாள்? அவள் இதுவரை எதைப்பற்றியாவது கவலைப்படுவதாகக் காட்டிக் கொண்டிருக்கிறாளா?

பாகவதர் தமக்குத் தாமே கேள்வியும் பதிலுமாக ஜோடித்து, ஒடிந்து விழுந்த மனத்தைத் தேற்றி நிறுத்த முயன்றார். அதில் அவருக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறிக் கிடைத்தன.