பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

 ஆட்டக்காரர்களிடம் பிளவு மனப்பான்மையை வளர்த்துவிடும். அதனால், பெரிதும் பாதிக்கப்படுவது ஆட்டக்காரர்களின் மனப்பாங்கு மட்டுமல்ல, வெற்றியும் நல்ல புகழும் தான்.

4. ஒரு குழுவை நல்ல 'வலிமையான குழு' என்று அழைக்கும்போது, அதில் உள்ள சிறந்த ஒரிரு ஆட்டக்காரர்களை மட்டும் குறித்துக் காட்டி அல்ல. சுமாரான ஆட்டக்காரரும் சிறந்த ஆட்டக்காரர்கள் போல் ஆடா விட்டாலும், தவறில்லாமல் ஆடிவிடுவதால் தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆகவே, வலிமையான ஆட்டக்காரர்களுக்கே வாய்ப்பளித்து, அவர்களையே உற்சாகப்படுத்திக் கொண்டிராமல், சுமாரான (Weak) ஆட்டக்காரர்களையும் பெரிதாக நினைத்து, அவர்களுக்குத் தைரியமும் தன்னம்பிக்கையும் ஏற்படும் வண்ணம் பயிற்சியளிக்க வேண்டும்.

5. பயிற்சிக்குப்பிறகு,போட்டியிட ஆடுகளத்திற்கு வந்துவிட்டால், பார்வையாளர்கள், எதிர்க்குழு ஆட்டக்காரர்கள், நடுவர்கள் மற்றும் போட்டி நடத்துவோர் இவர்களிடம் எவ்வாறெல்லாம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் ஆட்டக்காரர்களுக்கு முதலிலேயே போதித்து அழைத்து வரவேண்டும்.

'அன்பினால் அனைத்துக் காரியங்களையும் சாதிக்கலாம். அனைவரின் ஆதரவையும் சம்பாதித்துவிடலாம்' என்ற நன்னோக்கினை அவர்கள் நெஞ்சில் வேரூன்றச் செய்வது ஒவ்வொரு பயிற்சியாளரின் கடமையாகும்.