பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

3. ஆடுகளத்தின் தவறான பக்கத்திலிருந்து (Wrong Court) பந்தை அடித்தெறிதல்.

4. தவறான பகுதியில் பந்து விழுதல்.

5. நடுக்கோடு, அடித்தெறியும் அடையாளக் கோடு (Serving Crease), பக்கக் கோடுகள் (Side Lines) மற்றும் எல்லைக் கோடுகள் (Boundary Lines) இவற்றில் ஏதாவது ஒரு கோட்டின் மீது பந்து விழுதல்.

6. அடித்தெறியும் அடையாளக் கோட்டிற்கும் வலைக்கும் இடையில் பந்து விழுதல்.

7. தன் முறை வருவதற்கு முன்னதாகவே, ஒரு ஆட்டக்காரர் பந்தை அடித்தெறிதல். (அதாவது, தன் குழுவின் ஆட்டக்காரர் ஒருவர் பந்தை அடித்தெறியும் வாய்ப்பில் இருந்து ஆடிக்கொண்டிருக்கும்போது, அவர் அந்த வாய்ப்பை இழக்காமல் இருக்கும் பொழுது, (Not out), அவருக்கு முன்னே இவர் பந்தை அடித்தெறிந்து விடுதல்).

8. அடித்தெறிகிற ஆட்டக்காரரின் உடலில் எந்த ஒரு பாகமாவது அல்லது பந்தாடும் மட்டையாவது அடித்தெறிகின்ற நேரத்தில், ஏதாவது ஒரு கோட்டினைக் கடந்து விடுதல் (Cross).

குறிப்பு : கோட்டின் மேல் ஒரு கால் இருந்தாலும் அது ஆடுகளத்திற்கு வெளியே என்று தான் கருதப்படும்.

9. பந்தை அடித்தெறியும் போது அல்லது பந்தைத் திருப்பி ஆடி அனுப்பும்போது பந்து வலையைத் தாண்டிச் செல்லாதிருத்தல்.