பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அங்குல அகலம், பருமன் உள்ள மரக்கம்பங்களைப் பதிக்கலாம். அல்லது கான்கிரிட் கம்பங்களையும் நட்டுக் கொள்ளலாம். இவைகளை ஏன் குறிப்பிடுகிறோம் என்றால், வலிமையானதாக இருப்பதால், வலிந்து இழுக்கும்போது வளையாது விறைப்பாக இருந்து சிறப்பாகப் பயன்படுகின்றன என்பதால் தான்.

இனி, வளையாக் கம்பங்களைப் பதிப்பது எவ்வாறு என்றும் காணுவோம். ஊன்றப் பயன்படும் கம்பங்கள் ஏறத்தாழ 8½ அடி உயரம் இருக்குமாறு வைத்துக் கொண்டால் நல்லது. தரையில் குறைந்தளவு 2¼ அடி ஆழத்திலாவது கம்பத்தைப் பதித்தால் தான், உறுதியாக அசைவின்றி இருக்கும். அப்பொழுது கம்பத்தின் உயரமும் 6 அடி 3 அங்குலம் இருக்கும்.

வலையைக் கம்பத்தில் கட்டி விட்டால், வலைக்கு மேலே அதிக உயரமாகக் கம்பம் நீண்டிருக்கக் கூடாது என்பது ஆட்ட வல்லுநர்களின் அபிப்பிராயமாகும்.

வலைக்கு மேலே துருத்திக் கொண்டு மொட்டையாகக் கம்பம் நிற்பது, ஒரு அருவெறுக்கத் தக்கத் தோற்றத்தை அளிக்கிறது.

நின்றுகொண்டு ஆட்டத்தைக் கண்காணிக்கும் நடுவரின் பார்வையையும், கம்பம் மறைத்து விடுகிறது.

ஆகவே தான், வலைக்கு மேலே அதிகமான நீளம் உள்ளதாகக் கம்பங்களை நிறுத்தாமல், ஒரு 3 அங்குல உயரம் மட்டும் கம்பம் தலை நீட்டிக் கொண்டிருந்தால் போதும் என்று வல்லுநர்கள் கருதுகின்றார்கள்.