பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45


வேகமாகப் பந்தை அடிக்கவும், அதை விரும்பிய இடத்திலே போய் விழுமாறு செய்யவும் முடியும் என்று ஆசைப்பட்டால், கையில்லாதவள் பரத நாட்டிய முத்திரை காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்ட கதையாகிப் போகும்.

ஒவ்வொரு படியாக ஏறித்தான் மாடியை அடைய வேண்டுமே தவிர, ஒரேயடியாகத் தாவிக்குதித்து ஏறுவேன் என்று யாராவது முயற்சி செய்தால், முடிவு என்ன ஆகும் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே! அதுபோலவே, ஒவ்வொரு திறனையும் (Skill) படிப்படியாகக் கற்று பழகி, தெளிந்து, தேர்ந்து, பின்னரே முதிர்ச்சியும் எழுச்சியும் பெறவேண்டும் என்பதைப் பழகும் ஆட்டக்காரர்கள் மறந்து விடவே கூடாது.

அடித்தாட ஆசைப்படும் ஆட்டக்காரர்கள், முதல் படியாக, வருகிற பந்தைத் தள்ளி (Push)ஆடவேண்டும். மட்டையின் நடுவிலே பந்து சரியாக படுவது போல் ஆகிக் கொண்டு தள்ளி ஆடத் தொடங்கிய பிறகு, கொஞ்சம் வேகத்தை (Force) அதில் கூட்டி தள்ளி ஆட வேண்டும். தள்ளும் வேகம் சரியாக அமைந்துவிட்டால், அடித்தால் பந்து சரியாகப் போகும் என்ற தன்னம்பிக்கையும் வந்து விட்டால், அதன் பிறகே அடித்து Hit) அனுப்ப வேண்டும்.

அடித்தாடும் ஆற்றல் கொஞ்சம் வந்தவுடன், நினைத்த இடத்திற்கு எதிர்க்குழுவிற்கு அனுப்ப முடியாமற் போனலும், எதிர்க்குழு ஆடுகளத்தில் போயாவது விழுகிறதே அல்லது போய் விழுந்தால் போதும் என்ற திருப்தியுடன் ஆடவேண்டும்.அவ்வாறு பெறுகிற மன திருப்தியே மனோ வலிமையையம் தைரியத்தையும் உண்டுபண்ணும்.