பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

6. எப்பொழுதும், எதிர் ஆட்டக்காரர்கள் மிகவும் சாமர்த்தியசாலிகள், அவர்களிடம் நம் ஆட்டம் செல்லாது, ஜம்பம் பலிக்காது என்று எடைபோட்டுக் கொண்டு ஆடுவது எவ்வளவு தவறான ஆட்டமோ, அது போலவே எதிராட்டக்காரர்களுக்கு அவ்வளவு நன்றாக ஆடத் தெரியாது என்று தாழ்வாக நினைத்துக் கொண்டுபோய் நிற்பதும் மிகவும் தவறான ஆட்ட முறையாகும்.

7. தன்னம்பிக்கை இல்லாமல், தாழ்வு மனப்பாங்குடன் நின்று கொண்டு, நம்மால் முடியுமா? என்று தளர்ந்து போய் ஆட முயல்வதும் தவறாகும். அது போன்ற நினைவை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும்.

8. தான் ஆடுகின்ற பந்தானது, எதிர்க் குழுவினருக்குத் தவறில்லாமல் அனுப்பிட முடியும் என்ற நம்பிக்கையுடன் ஆட வேண்டும். அனுப்ப முடியுமா? அனுப்பினால் போகுமா என்ற அதைரியத்துடன், அரைமனதுடன் ஆடவேகூடாது. பயந்தாடுவதும் தவறு. அரைமனது ஆட்டம் அபத்தமாகவே முடியும்.

9. கடைசி வெற்றி எண் வரையிலும் போராடிக் கொண்டு ஆடுகின்ற ஆட்டமே சிறந்த ஆட்டமாகும். எதிர்க் குழுவினர் இரண்டொரு வெற்றி எண்கள் அதிகம் எடுத்தவுடனேயே, வேகம் குறைந்து போய், விவேகம் இழந்த செயல்களுடன் தொய்ந்து போன நெஞ்சுடன் ஆட்டத்தைத் தொடர்வது வீரர்களுக்குரிய இலக்கணமல்ல. ஆகவே, வெற்றிக்காகவே ஆட்டம் என்றில்லாமல், விளையாட்டுக்காகவே விளையாட்டு என்ற பெருந்தன்மைமிக்கப் பேராண்மையுடன் ஆட வேண்டும்.