பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

10. தன் வலியறிந்து மாற்றான் வலி தெரிந்து போரிடும் மன்னர்களைப்போல தன் திறமையை அறிந்துகொண்டு மாற்றார் ஆட்ட முறையினைப் புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு ஆடுவதுதான் பார்வையாளர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளும் காந்த சக்தியான கவர்ச்சிமிக்க ஆட்டமாகும்.

11. ஓரிரு வெற்றி எண்கள் எதிர்க் குழுவைவிட அதிகம் எடுத்தவுடன், அல்லது ஒரு ‘முறை ஆட்டத்தில்’ வெற்றி பெற்றவுடன், தம்மைப் பெரிய ஆளாக எண்ணித் தற்பெருமை கொண்டு எதிரிகளை இலேசாக மதிப்பதும், எள்ளி நகைப்பதும் அறிவுடையோரின் பண்புகளல்ல. அது பண்பிழந்தோரின் இழிந்த செயலாகும். ஆடுகின்ற ஆட்டத்தை மதித்தும்> ரசித்தும், பிறரும் ரசித்து மகிழும் வண்ணம் ஆடுகின்ற ஆட்டமே போற்றுதற்குரியதாகும்.

மேலே விவரித்துக் கூறப்பெற்றக் குறிப்புரைகள் எல்லாம், விரும்பி வந்து ஆட்டத்தில் ஈடுபட்டு, விருத்தி செய்து பேரும் புகழும் பெறுவதுடன், மகிழும் குண நலன்மிக்க இளைஞர்களுக்கும், பூப்பந்தாட்ட நேயர்களுக்காகவுந்தான்.

பத்து வயதில் தொடங்கி எழுபது வயதுவரை தொடர்ந்து விளையாடி வருகின்ற பூப்பந்தாட்ட வீரர்கள் எத்தனையோ பேர் உண்டு. பூப்பந்தாட்டப் போட்டிகளில் வயோதிகர் வாலிபர் என்ற வித்தியாசமே இல்லாமல், விளையாடி வருவதைப் பார்த்தால், பூப்பந்தாட்டம் வாழ் நாள் முழுவதும் தொடர்ந்து வந்து துணை நிற்கும் என்பதையே நிரூபித்துக் காட்டி வருகிறது.