பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யான இடங்களில் பூப்பந்தாட்டப் போட்டிகளை வசதி படைத்த விளையாட்டில் ஈடுபாடு நிறைந்தவர்கள் நடத்தி வருகின்றார்கள். ஆர்வம் வேறு! ஆடும்முறை வேறல்லவா! விதிமுறைகளுடன் விழுமிய பொறுப்புடன் ஆடினால்தானே, ஆட்டம் வளரும். பொதுமக்களும் விரும்பி வரவேற்றுப் போற்றி, பங்கு பெற்று மகிழ்வார்கள்!

அத்தகைய விழுமிய நோக்கத்தின் அடிப்படையில்தான், பூந்தாட்டத்திற்குரிய அகில இந்திய அளவில் பின்பற்றப்படும் விதிமுறைகளை முதல் பகுதியில் தந்திருக்கிறேன். அடுத்த ஆடுகளம் அமைக்க வேண்டிய முறை, ஆட்டக்காரர்களின் தகுதி, அவர்கள் இடமறிந்து ஆடுகின்ற முறைகள், நாயகமாக விளங்கும் நடுவர்க்குரிய பண்புமுறை கடமைகள், மற்றும் போட்டி விழா நடத்துவோரின் பொறுப்புக்கள் அனைத்தையும் விரிவாகவே எழுதித் தந்திருக்கிறேன்.

பூப்பந்தாட்டத்திற்கான ஒரு முழுநூல் தமிழில் இலக்கியமாக வெளிவருவது நானறிந்தவரை இதுவே முதல்நூலாக இருக்கும் என்ற நம்பிக்கையில், இதை உங்கள் கையில் படைக்கிறேன். முழுநூல் என்றால் முழுமை பெற்றதென்று பொருளல்ல. வடிவில் முழு அளவில் என்றே கொள்ள வேண்டும்.

இந்நூல் முழுமை பெற, ஆட்ட வல்லுநர்கள், அனுபவம் நிறைந்தவர்கள் மற்றும் ஆட்டத்தில் ஈடுபாடு கொண்ட அனைவரிடமிருந்து ஆன்ற கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்நூலின் முழுமைக்கும் செழுமைக்கும் உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்கி உங்களிடம் அளிக்கிறேன்.

எனது நூல்களைத் தொடர்ந்து ஆதரித்து வரும் அன்பர்கள் அனைவரும், அரிய முயற்சியால் உருவான இந்நூலையும் ஏற்று ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

நவராஜ் செல்லையா