பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்ட நுணுக்கம் (Strokes)


பூப்பந்தாட்டம் விரைவாகப் பந்தையனுப்பி ஆடுகின்ற ஓர் ஆட்டமாகும். கைப்பந்தாட்டம் போல, நிதானமாக மூன்று முறை ஆடி எதிர்க்குழு பகுதிக்கு அனுப்புகின்ற ஆட்டம் போல் அல்லாமல், உடனே விரைவாகத் திருப்பி அனுப்புகின்ற தன்மையில் அமைந் திருப்பதால், பல வகைகளில் ஆடிப் பந்தை அனுப்பினால்தான், எதிராளியைத் திணறச்செய்து, எளிதாக வெற்றி எண் பெறமுடியும்.

பூப்பந்தாட்டத்திலும் பந்தை அனுப்பும் முறைகளில் பல வகையான திறன் நுணுக்கங்கள் இருக்கின்றன. அவ்வளவையும் ஒரு ஆட்டக்காரர் கற்றுத் தேர்ந்துவிட்டால், அவரே சிறந்த ஆட்டக்காரர் என்பதில் யாருக்குமே ஐயம் இருக்காது. ஆனால், அத்தனை திறன் நுணுக்கங்களிலும் தேர்ந்து விடுவது என்பது அவ்வளவு எளிதல்ல.

பின்வரும் ஆட்டத்திறன் நுணுக்கங்களில் ஏதாவது ஓரிரண்டு அடித்தாடும் முறைகளையும், எடுத்தனுப்பும் வகையினையும் கற்றுக்கொண்டு, ஆட்ட நேரத்தில் இடத்திற்குத் தகுந்தாற்போல் ஆடிவிட்டால், நல்ல ஆட்டக்காரர் என்ற புகழை வெகு சீக்கிரமே பெற்று விடலாம்.