பக்கம்:பூமியின் புன்னகை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

பூமியின் புன்னகை


உருப் படியாய்ச் சில நல்ல செய்ய எண்ணி
உள்ளங்கால் மண்தோய நடக்கு முன்னே

செருப்படிக்குத் தங்கமுலாம் பூசிவிட்டுத்
தெருமண்ணைக் காலிரண்டும் தீண்டாமல்

மறுப்பவர்தம் குரலெதுவும் என் செவியை
மடுக்காமல் தடுக்காமல் மாட்டிவைத்தீர்

பொறுப்பில்லாத் தலைவனாக்கிப் பிறர்துயரம்
கண்மறையப் பூச்சூட்டி விட்டு விட்டீர்!

அழுகுரலைக் கேட்காமல் மெல்லிடையின்
அரம்பையரை இசைபாடிச் சூழவிட்டீர்

எழுதரிய துயரங்கள் எவை யேனும்
என் கண்ணில் படமுடியா உயரத்தில்

தொழுகின்ற திருக்கூட்டம் உருவாக்கித்
துப்புரவாய்க் காயடித்து மழுங்கவைத்தீர்

பழுதின்றித் தொண்டு செய்ய வந்தவனைப்
பதவியெனும் சிலுவையினில் அறைந்துவிட்டீர்!

சாவதற்கு முன்புவரை என் வாழ்வைச்
சாரமில்லாப் புகழ் மொழியால் அலங்கரித்து

ஊரவர்க்கு, விருந்தாக்கி உலவவிட்டீர்
உள்ளத்தை இருட்டாக்கி அலற விட்டீர்

வேறெவர்க்கும் இல்லாத சுகபோகம்
விளைவித்தென் விவேகத்தைச் சூறையிட்டீர்

பேரெதற்கு? புகழெதற்கு? சிலைஎதற்கு?
பிறந்துவந்த நோக்கத்தைப் பிறழவிட்டீர்?