பக்கம்:பூமியின் புன்னகை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

பூமியின் புன்னகை


சாய்ந்தே நின்று வருவோர் போவோரனைவரையும்
மாய்ந்து மாய்ந்தே வம்புக் கிழுக்கும்
சண்டைக் களமும் சரியாய் அதுதானாம்
சாகஸ மேடையும் சதியரங்கும் அதுவேயாம்

வருடம் முழுவதும் கூட்டிக் கழித்து
எரிதல்-எரியா-நாட்களை எண்ணிப் பார்த்தால்
இருளில் எரிந்தது இரண்டொரு நாளே
விளக்கைத் தவிர வேறெல்லா மாகும்

விளக்காய் மட்டும் ஆனது குறைவு
பேரால் மட்டுமே அது தெரு விளக்கு
பேருக்கு மட்டுமே அது ஒரு விளக்கு
ஊருக் கிதனால் ஒளியுமில்லை உதவியுமில்லை

இருளை விலக்குவதே தெருவிளக் கென்று
இலக்கணம் எழுதிச் சொன்னாலும்
எங்கள் தெருவிளக்கு இதற்கொரு விதி விலக்கு
வீதி விளக்குக் குறிலாகி ளகரமும் லகரமாய்

விதி விலக்காகி நிற்பதே நடைமுறை
வல்லார் திருவள்ளுவர் வரைந்த குறள் நூலில்
‘எல்லா விளக்கும் விளக்கல்ல’ என்றிட்டார்

பாதிவரை அக்குறளைப் படித்தறிந்த காரணத்தால்
எங்கள் தெருவிளக்கு எந்நாளும் எரியாது
இந்த விளக்கு எந்த வகைக்கும் ஒரு விதிவிலக்கு!