பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பூர்ணசந்திரோதயம்-1 மாகச் சொல்லிவிட்டேன். பம்பாய்க்குப் போய்விட்டுத் திரும்பி வரலாமென்று என்னை அவர்கள் அழைத்தார்கள். நான் வரமாட்டேனென்றும், இந்த ஊரிலேதான் இருப்பேன் என்றும் சொல்லிவிட்டேன். என்னுடைய தாய் தந்தையர் இருவரும் மனமுடைந்து வருந்தினார்களானாலும், என் மனசை அதிகமாகப் புண்படுத்த விரும்பாதவராய், இந்த ஊரில் ஒரு மாளிகையை உடனே விலைக்கு வாங்கி அதில் என்னை வைத்து எனக்கு வேண்டிய ஆள்மாகாணங்களையும் ஏராளமான திரவியத்தையும் வைத்தார்கள். பம்பாயிலுள்ள எங்களுடைய வீடுகள், நிலங்கள் முதலிய சொத்துகளையெல்லாம் பார்த்துவிட்டு வரும் பொருட்டு, அவர்கள் அங்கே போய்விட்டுத் திரும்பிவந்து மறுபடியும் என்னை ஊருக்கு அழைத்தார்கள். நான் என்னுடைய மனோ உறுதியை மாற்றவே மாட்டேன் என்று சொல்லி விட்டேன். அவர்கள் இந்த ஊரில் கொஞ்ச காலமும், பம்பாயில் கொஞ்ச காலமுமாக இருந்து வருகிறார்கள். நான் தங்களை அடைவதற்கு இந்த ஒன்றரை வருஷகாலமாக எத்தனையோ வகைகளில் முயற்சி செய்து பார்த்தேன்; எதுவும் பலிக்காமல் போய்விட்டது. தங்களை நேரில் கண்டு பேசும் படியான சந்தர்ப்பமே எனக்கு வாய்க்காமல் போய்விட்டது. ஆகையால், நான் தங்களின்மேல் கொண்ட கட்டிலடங்காத பிரேமை யினால் மதியிழந்து நிலைகலங்கி வேறே வழியறியாமல் துணிந்து இப்படிப்பட்ட காரியம் செய்து தங்களைப் பலவந்தமாகக் கொண்டு வரும்படி செய்தேன். இவ்வளவுதான் என்னுடைய வரலாறு. இந்த ஏழையைத் தாங்கள் எந்த வழியில் விட்டாலும், அது எனக்குச் சம்மதமே. எப்படியாவது தாங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் நாளையதினம் பொழுது விடிவதற்குள் நான் பிணமாகப் போய்விடுகிறது. நிச்சயம். இந்தப் பெண் பாவத்தைத் தேடிக்கொள்ளத் தங்களுக்குச் சம்மதம் இருக்காது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்' என்று மிகவும் உருக்க மாகவும் கரைகடந்த காதலோடும் மொழிந்தாள்.