பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 269 களஞ்சியத்தில் ஆழ்ந்து தனது மனத்தை அவற்றில் லயிக்க விடுத்தவளாகச் சென்று கொண்டிருக்க, வேறே மனிதர் இல்லாத ஒரிடத்தில் தனியாக நின்று கொண்டிருந்த ஒரு மனிதன் தனது கையில் பிடித்து வைத்துக் கொண்டிருந்த அபூர்வமான தோற்றத்தையுடைய ஒரு கிளியை அவளுக்கு எதிரில் காட்டி, 'அம்மா! இதோ பார்த்தீர்களா இந்தக் கிளியை? இதற்குமுன் நீங்கள் எத்தனையோ வகையான கிளிகளைப் பார்த்திருக்கலாமே! இதைப் போலப் புதுமாதிரியாக இருக்கும் கிளியைப் பார்த்ததுண்டா?’ என்று கூற, எதிர்பாராத அந்தச் சம்பவத்தைக் கண்ட பூர்ண சந்திரோதயம் திடுக்கிட்டு நின்று, அந்தக் கிளியைப் பார்க்க, அதன் அபூர்வமான அமைப்பு ஒரு நொடியில் அவளது கவனம் முழுதையும் சடக்கென்று கவர்ந்துகொண்டது. அந்தக் கிளி பருமன் உருவம் முதலியவற்றில் குயில் போல இருந்தது. ஆனாலும், அதன் நிறமும் இறகுகளின் அழகும் மகா வசீகரமாகவும் புதுமையிலும் புதுமையாகவும் இருந்தன. அந்தக் கிளியின் முகம் முதல் கழுத்து வரையில் ஊதாநிறமாகவும், கால்கள் இரண்டும் மஞ்சள் நிறமாகவும், மற்ற பாகமெல்லாம் பச்சைநிறமாகவும் இருந்தன. அதில், ஒரு விசேஷம் என்னவென்றால், அதன் உடம்பு முழுதும் அதிமிருதுவான மயிர் அடர்ந்திருந்தது. தத்ரூபம் வெல்வெட்டுப் பட்டுப்போல இருந்ததன்றி சீட்டித்துணிகளில் இருப்பது போல, அற்புதமான சில புள்ளிகள் அதன்முகத்திலும் உடம்பிலும் அழகாக விழுந்திருந்தன. அந்தக் கிளியின் தோற்றம், மூன்று நிறமான விலையுயர்ந்த வெல் வெட்டு ஆடைகளை அணிந்திருந்த, வசீகரமும் அழகும் நிறைந்திருந்த ஒரு குழந்தையின் தோற்றம் போல இருந்தது. பட்சிகளின் இடத்தில் அருவருப்புடைய மனிதர்கள்கூட அதைக் கண்டு வியப்பும் திகைப்பு மடைந்து பிரமித்து சிறிது நேரம் ஆச்சரியம் அடைந்து நிற்கச் செய்யத்தக்க புதிய அமைப்பும் வசீகரத் தோற்றமும் பெற்றதாக அந்தக் கிளி காணப்பட்டது.