பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 285 அதைக்கேட்ட பாளையக்காரர் முன்னிலும் அதிகமாகப் பதைத்தவராய், 'ஆம்; அது கட்டாயந்தான். உன்னுடைய அற்புதமான அழகு என்னை அப்படிக் கட்டாயப் படுத்துகிறது. ஆகையால், ஒன்று சிநேகிதராக இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் விரோதியாக இருக்க வேண்டும். மத்தியஸ்தமான ஏற்பாடென்பது கிடையாது. என்ன சொல்லுகிறாய்? என்னுடைய ஆசையெல்லாம் உன் மேல் பூர்த்தியாக வீழ்ந்துவிட்டது. என் வலையிலிருந்து நீ என்றைக்கும் தப்ப முடியாது. எவர் கையிலும் அகப்படாமல் ஆகாயத்தில் பறக்கும் இந்த சீனத்துக்கிளியைக் கூட நான்பிடித்து இதோ கையில் வைத்துக்கொண்டிருக்கிறேன். ஜெகன்மோகன விலாசத்தின் இரண்டாவது உப்பரிகையிலுள்ள பறக்கத் தெரியாத அந்த மாயாஜாலக் கிளியைப் பிடிப்பதற்கு அதிகநேரம் ஆகாது. இந்த விஷயத்தில் எல்லாம் தானாகக் கனிந்து வருவதே இன்பகரமானது. ஆகையால், கசக்கி மோர எனக்கு இஷ்டமில்லை. அதனாலேதான் நான் இவ்வளவு தூரம் நயந்து கேட்கிறேன். என்ன சொல்லுகிறாய்? நீ என்னுடைய இஷ்டத்துக்கு இணங்கியதற்கு அடையாளமாக இந்தக் கிளியை உன் கையில் வாங்கிக் கொள். இல்லாவிட்டால், அந்தக் கிளியை நான் பிடிக்கிற வழியில் பிடித்துக்கொள்ளுகிறேன்" என்றான். பூர்ணசந்திரோதயம் முன்னிலும் அதிக வெறுப்போடு அவனைப் பார்த்து, 'நீர் கிளி பிடிக்கிற வழிகளை மாத்திரமே அறிந்தவர் என்பது நீர் சொல்வதிலிருந்தும் தெரிகிறது; உம்முடைய முகத்தைப் பார்த்தாலும் அப்படித்தான் இருக்கிறது. மனிதரைப் பிடிக்கும் யோக்கியதை உமக்குக் கொஞ்சமும் கிடையாது. ஆகையால், தயவு செய்து நீர் போய்விட்டு வாரும். உம்மிடத்தில் இனி ஒரு வார்த்தைகூடப் பேச, எனக்கு இஷ்டமில்லை' என்று கூறியவண்ணம் அவ்விடத்தை விட்டு இரண்டோரடி நடக்க முயன்றாள்.