பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பூர்ணசந்திரோதயம்-1 நினைத்துக் கரைகடந்த துயரத்தில் ஆழ்ந்தவளாகக் கமலம் திரும்பவும் அந்த வண்டியிலேயே ஏறிக்கொண்டு தான் தங்கியிருந்த சத்திரத்திற்குப் போய்ச் சேர்ந்து அந்த வண்டியை அனுப்பிவிட்டு அவ்விடத்தில் உட்கார்ந்தபடி சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். அப்போது அவ்விடத்தில் வந்த சில மனிதர்களை நோக்கி அந்த மடந்தை, அந்த ஊரிலிருந்து நாகைப்பட்டணத்திற்குப் போகும் தபால் வண்டிகள் எப்போது புறப்படுமென்று விசாரிக்க, சிறிது துரத்திலிருக்கும் வண்டிப்பேட்டையில் போய் விசாரிக்கும் படி அவர்கள் மறுமொழி கூறினர். உடனேகமலம் தனது துணி மூட்டையைக் கையில் எடுத்துக்கொண்டு வண்டிப் பேட்டையை நோக்கி நடக்கலானாள். அவள் தனது நினைவு முழுவதையும் திருவாரூரில் வைத்துக்கொண்டு மிகுந்ததுயரத்தினால் சோர்ந்து தளர்ந்து மெல்ல மெல்ல நடந்து போய்க் கொண்டிருந்த தருணத்தில், அவளுக்கு எதிரில் வந்த நாலைந்து முரட்டு மனிதர்கள் புரளியாகப் பேசிய வண்ணம் அவளை நடுவில் விட்டு நாற்புறங்களிலும் சூழ்ந்து அவள் மீது முரட்டுத்தனமாக இடித்தும் உராய்ந்தும் அப்பால் சென்றனர். அவர்களது நடத்தையைக் கண்டு மிகுந்த திகிலும் நடுக்கமும் அடைந்த கமலம் ஒட்டமும் நடையுமாக அப்பால் போய், பக்கத்திலிருந்த வண்டிப்பேட்டைக்குள் நுழைந்து நாகப்பட்டணத்திற்கு வண்டிகள் எப்போது புறப்படும் என்பதை விசாரித்தாள். மறுநாட் காலையில் புறப்படப் போகிறது என்பதைக் கேட்ட கமலம் மிகுந்த மகிழ்ச்சியும் இன்பமும் அடைந்தவளாய், தன்னை உட்கார வைத்துக்கொண்டு போவதற்காக இடம் அமர்த்தி, அதன் பொருட்டு அச்சாரம் கொடுப்பதற்காக, தனது இடையிலிருந்த பணப்பையைப் பார்க்க, அது காணப்பட வில்லை ஆகா! என்ன செய்வாள் அவளது தேகம் திடுக்கிட்டுப் பதறியது சற்றுமுன் சூழ்ந்து தன்மீது உராய்ந்த முரட்டு மனிதர்களே வெகுதந்திரமாகப் பணப்பையைப் பிடுங்கிக் கொண்டு போய் விட்டார்கள் என்பதைக் கமலம் உடனே உணர்ந்து கொண்டாள்.