பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 21 வருகையை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருப்பவளாகக் காணப்பட்டாள். பக்கத்திலிருந்த மேஜையின் மீது ஒரு கண்ணாடி விளக்கு அதிகப் பிரகாசத்தோடு எரிந்துகொண்டி ருந்தது. அவ்வாறு அந்தக் கட்டழகி ஆவலே வடிவாக உட்கார்ந்திருந்த சமயத்தில், அவளுக்கெதிரிலிருந்த ஜன்னலின் மேல் சடேரென்ற ஒசையுண்டாயிற்று. அடுத்த நிமிஷத்தில் சுண்டைக்காய்ப் பருமனிருந்த ஒரு சிறிய கூழாங்கல் உள்புறத்திலே பொத்தென்று வந்து விழுந்தது. அதைக்கண்ட உடனே அந்த மங்கையின் வதனம் மகிழ்ச்சியினால் மலர்ந்தது. உடம்பு பூரித்துப் புளகாங்கிதம் அடைந்தது. கண்கள் உருக்கி வார்த்த கண்ணாடிபோல இளகி ஜ்வலித்து, அவளது மனதின் நெகிழ்வைக் காட்டியது. அவள் உடனே குபிரென்று எழுந்து விளக்கை அணைத்தாள். கல் வந்து விழுந்த ஜன்னலுக்குமேல் ஒர் ஆள் நுழையத்தகுந்த ஒரு திறப்பு இருந்தது. அந்தத் திறப்பு பச்சைக் கண்ணாடியால் மூடப்பட்டி ருந்தது. அந்தப் பெண் விளக்கை அணைத்தவுடன், ஓசை செய்யாமல் மேற்படி கண்ணாடியைத் திறந்து வைத்துவிட்டு வந்து கட்டிலின் மேல் பரப்பப்பெற்றிருந்த மெத்தையின் ஒரு மூலைக்குப் போய் அவ்விடத்திலிருந்த சில தையல்களைப் பிரித்து அதற்குள் திணித்து வைக்கப்பட்டிருந்த பட்டுக் கயிற்றினால் பின்னப்பட்டி ருந்த ஒரு நூலேணியை வெளியில் இழுத்து, அதன் ஒரு நுனியை ஜன்னலின் கம்பிகளில் இறுகக் கட்டி மறு நுனியை ஜன்னலிற்கு மேலே இருந்த திறப்பின் வழியாக வெளியில் கொண்டு போய் மெதுவாகத் தொங்க விட்டாள். அவள் அவ்வளவு காரியத்தையும் ஒரு நிமிஷ நேரத்தில் செய்து முடித்து விட்டுக் கீழே குனிந்து பார்த்த வண்ணம் பதைபதைத்து நின்றாள். அப்போது வளர்பிறைக் காலமாதலால், மேகங்களில்லாத சுத்தமான ஆகாயத்தில் சந்திரன் ஜிலுஜிலென்று பன்னீரைத்