பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பூர்ணசந்திரோதயம்-1 வார்த்தைகளையே எப்போதும் பேசி, ஆசியமாகசம்பாஷித்துப் பொழுதைப் போக்குவதிலும், அந்த நகரத்தில் புதுமையாகவும் அழகாகவும் யாராவது பெண்கள் வந்திருந்தால் அவர்களைப் பற்றிப் பேசி மகிழ்ச்சி யடைவதிலுமே அந்த இளவரசருக்கு அத்தியந்தப் பிரியம். அந்த இளவரசர், முன் அதிகாரங்களில் விவரிக்கப்பட்ட விநோத சம்பவங்கள் நிகழ்ந்ததற்கு சில மாதகாலத்திற்குப் பிறகு ஒருநாள் இரவு ஒரு பெருத்த விருந்திற்காக அழைக்கப்பட்டு, அதற்குப் போயிருந்தனர். அந்த ஊரிலிருந்த மற்ற எல்லா ஜெமீந்தார்களையும்விட அதிக வருமானமும் பெருமையும் வாய்ந்தவரான மருங்காபுரி ஜெமீந்தாரது அழகிய மாளிகையில் அந்த விருந்து நடைபெற்றது. அந்த விருந்திற்கு அவர் இளவரசரையும் அந்தரங்க நண்பர்களான வேறு நால்வரையும் வருவித்திருந்தார். ஆகவே, அவர்கள் அறுவர் மாத்திரமே தனியாக இருந்து அந்த விருந்தை உண்டனர். மருங் காபுரி ஜெமீந்தாரது மாளிகை ஒர் அரசனது மாளிகையென மதிக்கத் தக்கதாக அவ்வளவு அதிக உன்னதமாகவும் விஸ்தாரமாகவும் இருந்தது. அந்த ஜெமீந்தாருக்கு வயது ஐம்பதிற்குமேலாகி யிருந்தது. அவரது மனைவி இறந்துபோய்விட்டமையால், அவர் எவ்விதக் கால்கட்டும் இல்லாமல், சுயேச்சையாக இருந்து, தமது மனம் போனபடியெல்லாம் செய்து கொண்டிருந்தார். இந்த உலகத்திலுள்ளவரையில் சகலவிதமான சுகபோகங் களையும் சம்பூர்ணமாக அநுபவித்துத் தீர்த்துவிட வேண்டு மென்பது அவரது பாலிய காலத்திலிருந்தே அவர் அநுஷ்டித்து வந்த முக்கியமான கொள்கை, அவர் தம்மை மன்மதனது அவதாரமென்றே எண்ணிக்கொண்டிருந்தார். அவரது தாடைகள் ஒட்டிக் குழிந்து போயிருந்தனவானாலும், அவர்உயர்ந்த வைரக் கடுக்கன்களையும் தங்க விளிம்புள்ள மூக்குக் கண்ணாடி யும் அணிந்து முகத்தின் களையையும் ஜ்வலிப்பையும் அதிகப்படுத்திக் கொண்டிருந்தார். அவரது பற்கள் முழுவதும் தேய்ந்து ஆடிப்போயிருந்தமையால் அவைகளையெல்லாம்