பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 61 நின்று பேசியதை உற்றுக் கவனித்துத் தங்களையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்பதைக் கண்டுவிட்டாள். உடனே அவளது மனம் ஒருவித சஞ்சலமுற்றது. அவளது பார்வை அடிக்கடி சத்திரத்தின் மேன்மாடத்திற்கும், கிளிக்கூண்டிற்கும், கலியாணபுரம் மிட்டாதாரிடத்திற்குமாகச் சென்று வட்டமிடத் தொடங்கியது. அவர் நிற்பதைவிட உட்கார்ந்து கொண்டால், சத்திரத்திலிருந்து கவனித்த மனிதனுக்கு அவரிருந்தது தெரியாமல் போய்விடுமென்ற எண்ணம் அவளது மனதில் உதித்தது. உட்கார்ந்துகொள்ளும்படி அவரை உபசரித்தால்தான் அவர் மேல் பிரியம் கொண்டுவிட்டதாக அவர் எண்ணிக் கொள்ளப் போகிறாரே என்ற நினைவினால், அவ்வாறு உபசரிப்பதற்கும் அவள் பின்வாங்கினாள். உடனே செலவு பெற்றுக்கொண்டு போகாமல், தயங்கித்தயங்கி நிற்கும் அந்தப் பிரபுவைத்தான்.அப்படியே நிறுத்தி வைப்பதாவது, போகும்படி சொல்வதாவது அவளுக்கு அவமரியாதையாகத் தோன்றியது. அவ்வாறு தத்தளித்த நிலைமையிலிருந்த பூர்ணசந்திரோதயம் அவர் கடைசியாகச் சொன்னதற்கு மறுமொழியாகப் பேசத் தொடங்கி, 'சுயேச்சையாகத் தன்னுடைய பந்துமித்திரர்களோடு கூடி ஆகாயத்திலெல்லாம் திரிந்து குதூகலமாக இருக்கும் இந்தக் கிளியைக் கொணர்ந்து சொற்பமான இடமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கிளிக்கூண்டாகிய இந்தச் சிறைச்சாலையில் போட்டு வைத்து, அதன் இயற்கைக்கு மாறாக ஒரே இடத்தில் உட்கார வைத்து நாம் ஒடுக்குவதற்கு, அது இப்படித் தப்பி ஓடுவதைத் தவிர வேறே கைம்மாற்றை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும் ? நாம் அதனிடத்தில் எவ்வளவு அபாரமான வாஞ்சை வைத்து, அதை உண்பித்துக் காப்பாற்றினாலும் அவைகள் எல்லாம், அது சுயேச்சையாகத் திரியும் அந்த ஓர் ஆனந்தத்துக்கு ஈடாகாதல்லவா தன் ஜோடியும் குஞ்சுகளும் தன்னிடத்தில் பிரியம் வைப்பது அதற்கு இன்பமாக இருக்குமா? நாம் பிரியம் வைப்பது இன்பமாக இருக்குமா? நாம் எவ்வளவுதான் பிரியம் வைத்தாலும், அவ்வளவும் அதற்குப் பெருத்த வதைதான்' என்றாள்.