பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


112 பூர்ணசந்திரோதயம்-2 அருவருப்பான பார்வையாகப் பார்த்து அவமரியாதையான ஒருமைப் பதங்களை உபயோகித்துக் கேவலமாகதுவித்ததைக் கேட்கக் கேட்க, அவரது உடம்பு குன்றிக் குறுகிப் போயிற்று. கை கால்களெல்லாம் வெடவெடவென்று நடுங்குகின்றன. முகம் விகாரமடைந்து வெளுத்துப் போனது. அப்புறம் இப்புறம் அசையவிடாமல் அவரை அந்த நாற்காலி எப்படி இறுகப் பிடித்துக்கொண்டிருந்ததோ, அதுபோல, அவருக்கு ஏற்பட்ட அவமானம், அவரது தொண்டையை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தது. ஆகையால், அவர் எவ்வளவு முயன்றும் வார்த்தைகள் வெளிப்படாமல் தடைபட்டுத் தடுமாற்றம் அடைந்தன. நெஞ்சு காய்ந்தும் நாவறண்டும் போயின. சிறிது நேரத்திற்கு முன் நாற்காலியில் அகப்பட்டுத் தமது வலையில் முற்றிலும் வீழ்ந்திருந்த அந்தப் பெண்ணை விடுவிக்காமல், அதே நிலைமையில் பலவந்தப் படுத்தித் தமது கருத்தை நிறைவேற்றி அவளது செருக்கை அடக்காமல் ஏமாறிப் போனதன்றி, தான் செயலற்ற கேவலமான நிலைமைக்கு வந்து விட்டதை நினைக்க நினைக்க, அவரது மனம் பதறிப் புண்பட்டது. அவர் அவளைப் பார்த்துக் கெஞ்சி மன்றாடவும் வெட்கி, கீழே குனிந்துகொண்டு சும்மா இருந்துவிடவும் துணியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல இருந்து தத்தளிக்க, அவருக்கெதிரில் முறுக்காக நிமிர்ந்து நின்று கொண்டிருந்த பூர்ணசந்திரோதயம், கடைசியாக அவரை இன்னொரு முறை ஏளனமான பார்வையாகப் பார்த்துவிட்டு அந்த ரதிகேளி விலாசத்தை விட்டு அப்பால் நடந்து வெல்வெட்டு மாடத்தை அடைந்தாள். அடைந்தவள் அதற்குள் நுழைந்து தான் வந்தபோது கழற்றி நாற்காலியின் மீது வைத்திருந்த தனது பட்டு அங்கியை எடுத்துத் தனது உடம்பைத் தலைமுதல் கால்வரையில் போர்த்திக்கொண்டு வாசற் கதவண்டை போய்ச் சேர்ந்தாள். ஆனால், அந்தக் கதவு முன் தடவையில் அவள் முயன்று பார்த்த போது பூட்டப்பட்டிருந்தது போலவே