பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பூர்ணசந்திரோதயம்-2 உட்புறத்தில் நுழைந்தார். உட்புறம் முழுதும் இருள் அடர்ந்து நிரம்பவும் பயங்கரமாக இருந்தது. அவர் அந்த மாதை அழைத்துக்கொண்டு எதிரில் இருந்த சமையலறைக்குள் நுழைந்து, அவ்விடத்தில் ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த ஒரு லாந்தரை கொளுத்திக் கையில் எடுத்துக் கொண்டு சிறிது தூரத்திற்கு அப்பால் காணப்பட்ட படிக்கட்டை அடைந்து அதன் வழியாக மேன்மாடத்திற்கு ஏறிச்சென்றார். அவர்கள் இருவரும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் மெளனமாகவே நடந்தனர். அந்த பயங்கரமான நடு இரவில் அந்த இடம் முற்றிலும் நிசப்தமாக இருந்தமையால், அந்தப் புருஷர் நடந்ததனால் உண்டான காலடி ஓசை மாத்திரம் அவ்விடத்தில் உண்டானது, அந்தப் பெண்ணின் புண்பட்ட மனதை ஈட்டியால் குத்துவதுபோல வந்து வந்து தாக்கியது. ஆனால், அவள் நடந்ததில் காலடியோசையே உண்டாக வில்லை. மகா துரதிர்ஷ்டசாலியான அந்த மடந்தையின் முகம் பிரேதக்களை அடைந்துவிட்டது. தான் மேன்மாடத்திற்கு போனவுடனே, அவ்விடத்தில் என்னவிதமான அபாயத்திற்கு ஆளாக வேண்டுமோ என்றும்; எப்படிப்பட்ட கோரக் காட்சி யைக் காண வேண்டுமோ என்றும் நினைத்து அவளது மனம் தாமரை இலைத் தண்ணிராகத் தவித்தது. அவளது உயிரில் பெரும் பாகமும் போய்விட்டது என்றே மதிக்கத் தகுந்த பரம விகாரமாக நிலைமையில் அவள் தனது கணவனைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாள். தானும் தனது கணவனும் சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று புறப்பட்டு மைசூருக்குப் போனகாலத்தில் தான் வென்னிர் அண்டாவிற்குள் மறைத்து வைத்துவிட்டுப் போன தனது கள்ளப்புருஷன் கொஞ்ச நேரத்தில் தப்பித்துக்கொண்டு போயிருப்பான் என்று அவள் உறுதியாக நினைத்தாள். அந்தச் சோர நாயகன் நூல் ஏணியை அப்படியே தொங்கவிட்டுப் போயிருக்கலாம் என்றும், அதைக் கண்டுகொண்ட தனது சொந்தப் புருஷர்,